×

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி 1 கிலோ ரூ.60க்கு விற்பனை: பொதுமக்கள் கலக்கம்

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தினமும் 700க்கும் மேற்பட்ட லாரிகள் மூலமாக சுமார் 7 ஆயிரம் டன் அளவிலான காய்கறிகள் தருவிக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். இதில், அத்தியாவசியத் தேவையான தக்காளி மட்டும் தினமும் 65 லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக கொண்டு வரப்படும் தக்காளியின் வரத்து நேற்று பாதியாக குறைந்தது. 35 லாரிகளில் மட்டுமே தக்காளி கொண்டு வரப்பட்டது. இதனால் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனையானது.

திடீர் விலை உயர்வு காரணமாக தக்காளியை வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், சமையலுக்கு முக்கியத் தேவை என்பதால் வேறு வழியின்றி தக்காளியை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ் முத்துகுமார் கூறுகையில், வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்றும், இந்த விலை உயர்வு ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும், அதன்பிறகு படிப்படியாக விலை குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

The post சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி 1 கிலோ ரூ.60க்கு விற்பனை: பொதுமக்கள் கலக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai Koyambedu market ,CHENNAI ,Chennai Koyambedu ,Andhra ,Karnataka ,Kerala ,Maharashtra ,Tamil Nadu ,
× RELATED கோயம்பேடுக்கு வரத்து குறைவு...