×

இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். இன்று முதல் 30ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். இதனிடையே மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ‘ரெமல்’ புயலாக வலுப்பெற்றது. இது நேற்று “தீவிர புயலாக” வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

இது மேலும், வடக்கு திசையில் நகர்ந்து நள்ளிரவு, வங்காளதேச கேப்புப்பாராவிற்கும், சாகர்தீவிற்கும் இடையே, கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேத்திலும், இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28ம் தேதி முதல் 1ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக குழித்துறையில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தில் 3 செ.மீ, கொளத்தூரில் 2 செ.மீ மழை பெய்துள்ளது.

The post இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,Puduwai ,Karaikal ,
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு