×

அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு சேர்த்து வீட்டில் தயாரிக்கும் உணவும் ஆபத்துதான்..!ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்

சென்னை: பொதுவாக கடைகளில் சாப்பிடும் உணவு உடலுக்கு நல்லதல்ல என்றும், வீட்டில் தயாரிக்கும் உணவு மட்டுமே உடலுக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கூட உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர், ஐதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிஷியனுடன் இணைந்து இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல் குறித்த ஆய்வை நடத்தின.

அதில் அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கூட உடலுக்கு ஆபத்தானவை எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, காய்கறிகளை அதிக நேரம் சமைப்பதால் அதில் இருந்து கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுக்கள் சரியாக கிடைக்காது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான எண்ணெய் அல்லது வெண்ணெய்யை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளில் கலோரி மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கும்.

இது எடை அதிகரிப்பு, ரத்தக் குழாய் அடைப்பு போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி அதிக வெப்பநிலையில் சமைப்பது, வறுப்பது புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளுடன் தொடர்புடைய அக்ரிலாமைடுகள் மற்றும் ஹெட்டோரோசைக்ளிக் அமீன்களை உருவாக்கும். எனவே இதனைக் குறைப்பது உடலுக்கு நல்லது என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
மேலும் வீட்டில் சமைக்கும் போது அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக அளவு உப்பைச் சேர்ப்பது உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினை உருவாகும்.

உணவை முறையாக கையாளாமல், முறையாக சேமிக்க வைக்கவில்லை என்றால் அதில் பாக்டீரியாக்கள் உருவாகும் இது காய்ச்சல் உள்ளிட்ட உடல் பிரச்சனைக்கு வழிவகுக்கும். அத்துடன் பான்களில் (non stick pan) டெல்ஃபான் என்ற திரவம் பூசப்படுகிறது, இதனால் உயர்ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்டவையை ஏற்படுத்தும் எனவே முடிந்த அளவு மண்பாண்டத்தில் சமைக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தி உள்ளது.

The post அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு சேர்த்து வீட்டில் தயாரிக்கும் உணவும் ஆபத்துதான்..!ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல் appeared first on Dinakaran.

Tags : ICMR ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பாத்திரத்தை மூடாமல் சமைப்பது...