×

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு 670க்கும் அதிகமானோர் உயிரிழப்பு: ஐநா அமைப்பு தகவல்

போர்ட்மோர்ஸ்பி : பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர்கள் எண்ணிக்கை 670 ஐ தாண்டியுள்ளது என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள பப்புவா நியூ கினியாவில் கடந்த வாரம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் அதில் சிக்கினர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. நிலச்சரிவில் 100 பேர் பலியானதாக அந்த நாட்டின் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். நேற்று மண்ணில் புதைந்த நிலையில் 5 உடல்கள் மற்றும் ,இறந்த ஒருவரின் ஒரு காலும் மீட்கப்பட்டன. பேரழிவு ஏற்பட்ட எங்கா மாகாணத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ஐநா அமைப்புடன் தொடர்புடைய இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹன் அக்டோபரக் நேற்று கூறுகையில்,‘‘மண்ணுக்கு அடியில் 670 பேர் உயிரோடு புதையுண்டு இருக்கலாம் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.மேடான பகுதியில் இருந்து மண் தொடர்ந்து சரிந்து வருகிறது. இடிபாடுகள் மற்றும் மண் சரிவு ஏற்படும் பகுதியில் மீட்பு பணிகளை தொடர்வது சிரமமாக உள்ளது’’ என்றார். சில இடங்களில் மீட்பு பணிகளுக்கான கருவிகள் இன்னும் வரவில்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகியவை உதவி செய்ய முன்வந்துள்ளன. மேலும் சர்வதேச உதவியை கேட்பது தொடர்பாக பப்புவா நியூ கினியா அரசு நாளை முடிவெடுக்கும் என தெரிகிறது.

 

The post பப்புவா நியூ கினியா நிலச்சரிவு 670க்கும் அதிகமானோர் உயிரிழப்பு: ஐநா அமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Papua New Guinea ,UN ,Port Moresby ,Pacific Ocean ,Dinakaran ,
× RELATED ஐநாவில் உக்ரைன் தீர்மானம் 99 நாடுகள்...