×

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலையில் கூலிப்படை தலைவன் உட்பட 4 பேர் கைது: மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கார் பறிமுதல்

நெல்லை: நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக் ராஜன் கொலை வழக்கில், கூலிப்படை தலைவன் நவீன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு வாகைகுளத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜன் (30). கடந்த 20ம் தேதி பாளை. கேடிசி நகர் ரவுண்டானாவில் ஓட்டல் முன் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளை போலீசார். வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிந்து வைகுண்டம் அய்யப்பன், முன்னீர்பள்ளம் ஐயப்பன், வல்லநாடு தம்பான், மேலநத்தம் முத்துசரவணன் ஆகிய 4 பேரை கைது ெசய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் அனைவருமே கொலை நடந்த இடத்தில் இருந்தவர்கள். நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்கள் இல்லை. இதனால் கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்ததால் கொலை நடந்த இடத்தில் சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கூலிப்படை தலைவன் நவீன் தலைமையிலான கும்பல்தான் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், நவீன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தீபக்ராஜனின் உடலை வாங்க மறுத்து 6வது நாளாக உறவினர்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான நவீன், லெப்ட் முருகன், லட்சுமி காந்தன், சரவணன் ஆகிய 4 பேரை திருச்சி போலீசார் கைது செய்தனர். தகவலறிந்து நெல்லை தனிப்படை போலீசார் திருச்சிக்கு சென்று அவர்கள் 4 பேரையும் நெல்லைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய சிவப்பு நிற கார், மதுரை மேலூரில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த காரை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

நவீன் கூலிப்படையாக செயல்பட்டு வருபவர். சென்னையில் ஆற்காடு சுரேஷை இதேபோலத்தான் கூலிக்காக கொலை செய்துள்ளார். மேலும் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த வழக்குகளில் எல்லாம் மற்ற குற்றவாளிகள் ஆஜராகிவிட்டதால், நவீன் பல வழக்குகளில் சிக்காமல் தப்பி வந்துள்ளார். தற்போதும் அதேபோலத்தான் போலீசில் 4 பேரை சரணடைய வைத்தனர். ஆனால் சிசிடிவி கேமரா சிக்கியதால் நவீன் மாட்டிக் கொண்டார். நவீன் பிடிபட்ட தகவலை, உடனடியாக தனிப்படையினரே வெளியில் கசிய விட்டுள்ளனர். இதனால் இந்த தகவல் உடனடியாக வெளியில் தெரிந்து விட்டது. குற்றவாளியை விசாரிக்காமல் செய்வதற்காக ஒரு கும்பல் வேண்டும் என்றே தென் மாவட்டங்களில் பதட்டத்தை உருவாக்குவதுபோல வாட்ஸ்அப்களில் தகவல் வெளியிட்டு வந்துள்ளனர். இதுகுறித்தும் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் கொலையில் சுரேஷ், சரவணன் உள்பட மேலும் 7 பேருக்கு மேல் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நவீனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. யாருக்காக கூலிப்படையாக செயல்பட்டார் என்பதும், நெல்லை மாவட்டம் வேப்பன்குளத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் நவீனின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டர்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் இந்த கொலை குற்றவாளிகள் செல்போனிலோ, வாட்ஸ் அப்பிலோ பேசாமல், மோடம் மூலம் பேசி வந்துள்ளனர். ஆனாலும், கூலிப்படை தலைவன் நவீனிடம் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலையில் கூலிப்படை தலைவன் உட்பட 4 பேர் கைது: மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pashupati Pandyan ,Madurai-Trichy highway ,Nellai ,Pashupati Pandian ,Deepak Rajan ,Naveen ,Deepakrajan ,Pashupati ,Pandian ,Moontaipu Vagaikulam, Nellai district ,Dinakaran ,
× RELATED பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை தேடப்பட்டு வந்த 2 ரவுடிகள் கைது