×

திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கு; குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு: போஸ்டர் ஒட்டிய என்ஐஏ

கோவை: கொலை வழக்கில் ேதடப்படும் 5 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அதிகாரிகள் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புவனத்தை சேர்ந்தவர் பாமக பிரமுகர் ராமலிங்கம். பாத்திரக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2019 பிப்ரவரி 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு, என்.ஐ.ஏ.க்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரியை சேர்ந்த அப்துல் மஜீத் (40), வடக்குமாங்குடியை சேர்ந்த புர்ஹானுதீன் (31), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத் (30), திருமங்கலக்குடியை சேர்ந்த நபீல் ஹாசன் (31) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. என்ஐஏ அதிகாரிகள் தேடி வருவது தெரிந்து 5 பேரும் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க என்ஐஏ அதிகாரிகள் பல்வேறு பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேடப்படும் 5 பேரின் புகைப்படங்கள், அடையாளங்களை அச்சடித்து நோட்டீஸ் மூலம் விநியோகித்தும், சுவரொட்டியாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பொது இடங்களில் ஒட்டியும் தேடி வருகின்றனர்.

கோவையில் பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் 5 பேர் குறித்த விவரங்களுடன் கூடிய போஸ்டர்கள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. 5 நபர்களின் விவரம், முகவரி குறித்து தகவல் தெரிந்தால் தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை 600010, மற்றும் செல்போன் எண் 94999 45100 போன்றவற்றில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படுவதோடு ஒரு நபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும், ஒட்டுமொத்தமாக 5 பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ.25 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்படும் என என்ஐஏ தெரிவித்து உள்ளது.

The post திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கு; குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு: போஸ்டர் ஒட்டிய என்ஐஏ appeared first on Dinakaran.

Tags : Tirupuvanam Bamaka ,NIA ,Coimbatore ,Ramalingam ,Tiruppuvanam ,Kumbakonam ,Thanjavur ,Tiruppuvanam Bamaka ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...