×

ஏன்? எதற்கு? எப்படி?

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு உருவச் சின்னம் உள்ளது. அந்த ராசியில் பிறந்தவர்களின் குணநலன்களை இதன் மூலம் அறிய முடியுமா? மகரராசியின் உருவம் என்ன?
– ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ராசிக்கு உள்ள உருவச் சின்னத்தைக் கொண்டு அவர்களது குணநலன்களை வரையறுக்க முடியாது. உதாரணத்திற்கு ரிஷப ராசிக்கு உரிய உருவம் காளை என்பதால், ரிஷப ராசிக்காரர்கள் காளையின் குணத்தைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்வது தவறு. உண்மையில் ரிஷப ராசிக்காரர்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, அதிர்ஷ்டசாலிகளும்கூட. விருச்சிக ராசிக்கு உரிய உருவம் தேள் என்பதால், விருச்சிக ராசிக்காரர்கள் தேள் போன்று கொட்டும் குணத்தினை உடையவர்கள் என்று சொல்வது முற்றிலும் தவறு. இவ்வாறு நாமாகச் சொல்லிக் கொள்ளும் விளக்க உரைகள் அனைத்தும் நமது அனுமானத்தின் பேரில் சொல்லப்படுகின்ற கற்பனையே. ராசிகள் மட்டுமல்ல, நட்சத்திரத்திற்கும்கூட உருவச் சின்னம் என்பது உண்டு. உதாரணத்திற்கு அஸ்வினி நட்சத்திரத்திற்கு குதிரைச் சின்னமும், பரணி நட்சத்திரத்திற்கு யானையும் இருக்கும்.

அஸ்வினி என்று நாம் அழைக்கும் நட்சத்திரம், உண்மையில் ஒரேயொரு நட்சத்திரம் கிடையாது. பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பினைத்தான் ஒரு நட்சத்திரமாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த நட்சத்திரக் கூட்டத்தினை ஒன்றிணைத்து தொலைவிலிருந்து பார்க்கும் நம் கண்களுக்கு அது குதிரை வடிவத்தில் தென்படுகிறது. ஒரு நாளில் எந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு நடுவே சந்திரன் பயணிக்கின்றதோ, அதுவே அந்த நாளுக்கு உரிய நட்சத்திரமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, ஒவ்வொரு ராசி மண்டலத்திற்குள்ளும் மூன்றுவிதமான நட்சத்திரக் கூட்டங்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு மேஷராசி என்று எடுத்துக் கொண்டால் அதற்குள் அஸ்வினி, பரணி, கார்த்திகை (முதல்பாதம்) என்று மூன்றுவிதமான நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு உள்ளடங்கி இருக்கும். இந்த மண்டலத்தினை ஒன்றிணைத்து தொலைவில் இருந்து காணும்போது அதன் உருவம் ஆடு போல் நம் கண்களுக்குத் தென்படுகிறது. இதனால் மேஷ ராசிக்கு உரிய உருவச் சின்னமாக ஆடு என்று உருவகப்படுத்தி உள்ளார்கள். ராசி மண்டலங்களை தொலைவிலிருந்து நோக்கும்போது நம் கண்களுக்கு தெரியவரும் உருவ அமைப்பினைக் கொண்டு இந்தச் சின்னங்களை வரையறுத்து வைத்துள்ளார்கள்.

இவற்றைக்கொண்டு அந்த ராசிக்காரர்களின் குண நலன்களை வரையறுக்க இயலாது. மகரராசிக்கு உரிய உருவம் பற்றி வெவ்வேறு கருத்துகள் நிலவினாலும் பெரும்பாலானோரின் கருத்து முதலை என்பதே. மகரராசிக்கு உரிய உருவச் சின்னம் முதலை என்பதை வானவியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

சுமங்கலிப் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக்கொள்கிறார்கள். ஆண்கள் திருநீறுடன் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டுமா? ஆண்கள், குங்குமம் மட்டும் வைத்துக்கொள்ளலாமா?
– த.வேலுதங்கம், மானாமதுரை.

பெண்கள் நெற்றியில் குங்குமம் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும், ஆண்கள் நெற்றியில் திருநீறு மட்டுமே அணிய வேண்டும் என்பது தவறான கருத்து. சுமங்கலிப் பெண்களும் சரி, ஆண்களும் சரி நெற்றியில் திருநீறுடன் குங்குமத்தையும் திலகமாக வைத்துக் கொள்ள வேண்டும். ‘மந்திரமாவது நீறு’ என்கிறது தேவாரம். நெற்றியில் நீறு பூசுவதால் நோய்கள் காணாமல் போகின்றன. நமது உடம்பில் வலது மற்றும் இடது புறத்தில் உள்ள நாடிகள் ஒன்றாக இணையும் இடம் நமது நெற்றி. இதனை “சுஷூம்னா’’ என்று அழைப்பர். இந்த பகுதியே இறைவனுக்கு நெற்றிக்கண் அமைந்திருக்கும் இடம். இந்த நெற்றிக்கண்ணைத் திறப்பது என்பது கோபத்தின் வெளிப்பாடு. இந்த நெற்றிக்கண் அமைந்திருக்கும் பகுதியில் சுத்தமான மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை தரிக்கும்போது, கோபம் தணிகிறது.

எட்டாவது ராசி ஆண், ஆறாவது ராசி பெண்ணையும், ஆறாவது ராசி ஆண், எட்டாவது ராசி பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளலாமா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
– நா.ஜெயராமன், கல்லிடைக்குறிச்சி.

இதனை ஜோதிடர்கள் ‘ஷஷ்டாஷ்டகம்’ என்பார்கள். அதாவது, திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது பெண்ணின் ராசி முதல் ஆணின் ராசி வரை எண்ணும்போது ஆணின் ராசி ஆறாவதாகவும், ஆணின் ராசியிலிருந்து பெண்ணின் ராசி எட்டாவதாகவும் வந்தால் அதனை ‘ஷஷ்டாஷ்டகம்’ என்றும், இருவரும் சதாசண்டையிட்டுக் கொண்டு இருப்பார்கள் என்றும் பொதுவாக சொல்வார்கள். ஆனால், இதற்கு விதிவிலக்கும் உண்டு. மணமகன் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய பெண் ராசிகளில் பிறந்து, மணமகள் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய புருஷராசிகளில் பிறந்திருந்தால், இதனை ‘அனுகூலஷஷ்டாஷ்டகம்’, அதாவது, ‘ஷஷ்டாஷ்டக தோஷ நிவர்த்தி’, விவாஹம் செய்யலாம் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். அதேபோன்று, ராசி அதிபதி ஒருவனே ஆகில் தோஷம் கிடையாது என்பதும் மற்றொரு விதி ஆகும். இந்த விதியின்படி, மேஷம், விருச்சிகம், ரிஷபம், துலாம் ஆகிய இந்த இரண்டு ஜோடிகளுக்கும் ஷஷ்டாஷ்டக தோஷம் என்பது கிடையாது. ராசி அதிபதிகள் நட்புறவுடன் இருந்தாலும் இந்த தோஷம் அண்டாது. பொதுவான விதியை மட்டும் கருத்தில் கொள்ளாது, அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் மணமக்களின் ஜாதகங்களைக் காண்பித்து தீர்மானிப்பதே நல்லது.

The post ஏன்? எதற்கு? எப்படி? appeared first on Dinakaran.

Tags : P.T. Thangavelu ,Panrutti ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்;...