×

போக நந்தீஸ்வரர் ஆலயம்

ஆலயம்: போக நந்தீஸ்வரர் கோவில், நந்தி கிராமம், சிக்பல்லாபூர், கர்நாடக மாநிலம்.

காலம்: பொ.ஆ.8-ஆம் நூற்றாண்டிலிருந்து – 16ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் பல முக்கிய அரச வம்சத்தினரால் ஏராளமான கட்டுமானங்கள், திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

வெளியிலிருந்து பார்ப்பதற்கு எவ்வித பரபரப்புமில்லாமல், பக்தர் கூட்டம் அதிகமின்றி காணப்படும் இப்பெரும் ஆலய வளாகம், வரலாற்று, கலை ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. தென் பாரதத்தின் புகழ் மிக்க அரச வம்சத்தினரின் கோவில் கட்டுமான பொறியியல், சிற்பக்கலை நுணுக்கம், அழகியல் வேறுபாடுகள் அனைத்தையும் ஒரு சேர இந்த ஆலயத்தில் காணலாம். நுளம்பர், ராஷ்ட்ரகூடர், பாணர், கங்கர், சோழர், ஹொய்சாளர், விஜயநகரம் போன்ற பெரும் அரச வம்சத்தினர் தத்தமது பாணிகளில் தம் கலைப்பங்களிப்புகளை இவ்வாலயத்தில் செய்துள்ளனர்.

ராஷ்ட்ரகூட மன்னர் மூன்றாம் கோவிந்தன் (பொ.ஆ.806) கல்வெட்டுக்கள், பாண அரசர் ஜெயதேஜா (பொ.ஆ.810) செப்புப்பட்டயங்கள்,பிற்கால சோழர்களின் ஏராளமான கல்வெட்டுக்கள், விஜய நகர மன்னர்களின் திருப்பணி குறித்த கல்வெட்டுக்கள் மூலம் இவ்வாலயத்தின் தொன்மைச்சிறப்பு குறித்து அறியலாம். போக நந்தீஸ்வரர், அருணாச்சலேஸ்வரர் என இரு சன்னதிகளில் சிவபெருமான் லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். சோழர்கள் அமைத்த விமானங்களில் அவர்களின் தனிப்பாணி, கிரீவ கோஷ்ட பேரழகு சிற்பங்கள், பல்வேறு மன்னர்களால் அருகருகே அமைக்கப்பட்ட நந்திகளின் சிற்ப அமைதி, வேறுபாடுகள், ஒரே கல்லால் செய்யப்பட்ட நுணுக்கம் மிகுந்த கல்குடை, சிவன்-பார்வதி திருக்கல்யாணம், வெளிப்புறச்சுவரில் மகரம் மீது வருணன், கருவறை முன் மண்டபத்தின் வெளிப்புறமெங்கும் கிளிகள் செதுக்கப்பட்ட ஹொய்சாளர் தூண்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. விஜய நகர மன்னர்கள் அமைத்த திருச்சுற்றுக்களுடன் கூடிய திருக்குளம் பேரழகுடன் காட்சியளிக்கிறது. தற்போது இவ்வாலயம் இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

The post போக நந்தீஸ்வரர் ஆலயம் appeared first on Dinakaran.

Tags : Nandiswarar temple ,Bhoga Nandeeswarar Temple ,Nandi Village ,Chikballapur ,Karnataka State ,
× RELATED கருவறை முன் மண்டபம் ஒரு கலைக்கருவூலம்