×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்து 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் அதிரடி கைது

* மாஜி மனைவி பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் மீது போலீஸ் அதிரடி நடவடிக்கை

* நெஞ்சு வலிப்பதாக கதறியதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு

சென்னை: கேளம்பாக்கம் அருகே தையூரில் உள்ள பண்ணை வீட்டிற்குள் அடியாட்களுடன் வந்து, செக்யூரிட்டியை தாக்கிவிட்டு உள்ளே நுழைந்ததாக அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, ராஜேஷ் தாஸ் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கதறியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக ஆட்சியின் போது 2020ம் ஆண்டு சிறப்பு டிஜிபியாக ராஜேஷ் தாஸ் பணியாற்றினார்.

அப்போதைய முதல்வர் எடிப்பாடி பழனிசாமியின் பொதுகூட்டத்திற்கு பாதுகாப்பு பணி மேற்கொண்டார். அப்போது, பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் எஸ்பி ஒருவரிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி தனது காரில் அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி அப்போது சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் மீது அப்போதைய டிஜிபி திரிபாதியிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார். அந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

பிறகு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ெசன்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைதொடர்ந்து ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டதால் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதற்கிடையே முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் செயலால் தற்போது தமிழ்நாடு எரிச்சக்தித்துறை செயலாளராக பணியாற்றி வரும் பீலா ராஜேஷ் மனமுடைந்து, தனது கணவரிடம் விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் எனவும் மாற்றிக்கொண்டார். ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசனின் தந்தை வெங்கடேசனும் தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவரது தாயார் ராணி வெங்கடேசன் காங்கிரஸ் கட்சி சார்பில் சாத்தான்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். இதனிடையே பீலா வெங்கடேசனின் தந்தை வெங்கடேசன், கடந்த 2006ம் ஆண்டு சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் பாலசுப்ரமணியன் என்பவரிடம் 2 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தை கடந்த 2008ம் ஆண்டு தனது மகளான பீலாவுக்கு தானமாக வழங்கினார். இந்த இடத்தில் நீச்சல் குளம், தோட்டம் ஆகியவற்றுடன் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட பங்களாவை இருவரும் சேர்ந்து கட்டினர்.

இந்த பண்ணை வீட்டில்தான் ராஜேஸ்தாஸ் எப்போதும் தங்குவது வழக்கம். பாலியல் வழக்கு காரணமாக கடந்த 3 மாதங்களாக தையூர் பண்ணை வீட்டிற்கு அவர் வரவில்லை. ராஜேஷ்தாஸ் தலைமறைவான நிலையில், பண்ணை வீட்டிற்கு பீலா வெங்கடேஷ் வந்து, கோபு என்பரை செக்யூரிட்டியாக நியமித்து வீட்டை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இந்நிலையில் மேல் முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு அளித்த 3 ஆண்டு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து கடந்த 18ம் தேதி தையூர் பண்ணை வீட்டிற்கு ராஜேஷ்தாஸ் வந்தார். அப்போது பணியில் இருந்த செக்யூரிட்டி கோபு, கேட்டை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு பீலா வெங்கடேசனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதற்கு பீலா வெங்கடேசன் வீட்டில் யாரையும் விட வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது. செக்யூரிட்டி கோபு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸிடம் இதை கூறியுள்ளார். உடனே அவர் செல்போன் மூலம் ஆட்களை வரவழைத்து செக்யூரிட்டி கோபுவை அடித்து துரத்தி விட்டு, வீட்டின் உள்ளே அத்துமீறி உள்ளே சென்று தங்கினார்.

இதுகுறித்த தகவல் பீலா வெங்கடேசனுக்கு தெரியவந்தது. உடனே அவர், மின்வாரிய நிர்வாகத்திடம் மனு ஒன்றை அளித்தார். அதில், எனது வீட்டை சில மாதங்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், அதனால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்குமாறும் கூறியிருந்தார். இதையடுத்து, கேளம்பாக்கம் மின் வாரிய ஊழியர்கள், தையூர் கிராமத்திற்கு சென்று பண்ணை வீட்டின் மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்றனர்.

இதனிடையே, கடந்த 21ம் தேதி ஆன்லைன் மூலம் ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்றை அனுப்பினார். அதில், ராஜேஷ் தாஸ் எனக்கு சொந்தமான தையூர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தங்கியிருக்கிறார். அவரை வெளியேற்ற வேண்டும் என்று் கூறியிருந்தார். பீலா வெங்கடேசன் புகாரின் மீது கேளம்போக்கம் போலீசார், ராஜேஷ் தாஸ் உள்ளிட்டோர் மீது ஐபிசி 143, 352, 448, 454, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதைதொடர்ந்து நேற்று காலை பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தங்கி இருப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தவல் கிடைத்தது. அதன்படி பள்ளிக்கரணை துணை கமிஷனர் கவுதம் கோயம் மற்றும் தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி ஆகியோர் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பனையூரில் உள்ள ராஜேஷ் தாஸ் வீட்டிற்கு நேற்று காலை சென்றனர். ராஜேஸ் தாசிடம் கைது செய்வதற்கான ஆணையை வழங்கினர்.

முதலில் விசாரணைக்கு வர மறுத்தவரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, கேளம்பாக்கம் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். காவல் நிலையத்தில் போலீசார் கொடுத்த ஆவணங்களில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கையெழுத்து போட மறுத்தல், வாகனத்திலும், காவல் நிலையத்திலும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டுதல் போன்றவற்றில் அவர் ஈடுபட்டதையடுத்து அவர் மீது மேலும் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் அவர் காவல் நிலையத்தில் இருந்து வெளியில் அழைத்து வரப்பட்டார். திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு, அவர் திருப்போரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிபதி அனுப்பிரியா, முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாசிடம் உங்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரியுமா என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராஜேஷ்தாஸ் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன்னைக் கைது செய்து அழைத்து வந்திருப்பதாகவும், தான் எந்த ஆவணத்திலும் கையெழுத்து போடவில்லை என்றும் கூறினார். பிறகு திடீரென தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக கூறி நெஞ்சை பிடித்துக் கொண்டார். இதையடுத்து அவரை சிறிது நேரம் ஓய்வெடுக்குமாறு நீதிபதி கூறியதை அடுத்து வாகனத்திற்கு சென்று பின்னர் மீண்டும் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பின்னர் ராஜேஸ்தாசிடம், நீதிபதி மீண்டும் விசாரணை மேற்கொண்டார். நீங்கள் போலீசாரிடம் ஏன் அத்துமீறி நடந்து கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், அவ்வாறு நான் நடக்கவில்லை என்றும், கேளம்பாக்கம் உதவி கமிஷனர் வெங்கடேசன் தனிப்பட்ட முறையில் தன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டதாகவும் கூறினார். இதையடுத்து ராஜேஷ்தாஸ் சார்பில் வழக்கறிஞர் ஆதித்யா வரதராஜன், சந்திரசேகரன், முனியப்பன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இதைத் தொடர்ந்து நீதிபதி அனுப்பிரியா உங்களை நீதிமன்றக் காவலில் அனுப்பவில்லை என்றும் 2 பேர் ஜாமீனில் விடுவிப்பதாகவும், தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்றும் போலீசார் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் கூறி ராஜேஷ்தாசை விடுதலை செய்தார். இந்த சம்பவத்தால் திருப்போரூர் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

* சாப்பாடு வேண்டாம், சப்பாத்தி, சப்ஜி தான் வேண்டும்
கைது செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாசுக்கு மதிய உணவு போலீசார் ஏற்பாடு செய்தனர். அதற்காக தனியார் ஓட்டல் ஒன்றில் இருந்து சாப்பாடு வரழைத்தனர். ஆனால் ராஜேஷ்தாஸ் தனக்கு சாப்பாடு வேண்டாம். குப்தா பவனில் இருந்து சப்பாத்தி, சப்ஜி தான் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அதையே வாங்கி கொடுத்தனர்.

* ‘என் மீதே வழக்கு போடுவியா..’
பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து கைது செய்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவர், ஒரு போலீஸ் அதிகாரி போலவே நடந்துக் கொண்டு, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் ஒருமையில் சத்தம் போட்டு மிரட்டினார். குறிப்பாக கேளம்பாக்கம் உதவி கமிஷனர் வெங்கடேசனை பார்த்து, ‘உன்னை ஒழித்து விடுவேன்.. என் மீதே வழக்குப் போடுகிறாயா..’ என்று ஆவேசமாக கூச்சலிட்டார். இதனால் காவல் நிலையத்தல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

The post பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்து 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : DGP ,Rajeshdas ,Beela Venkatesan ,Chennai ,Thayur ,Kelambakkam ,
× RELATED தையூர் பங்களாவின் மின் இணைப்பு...