×

தையூர் பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்த ராஜேஷ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் தரப்பு உயர் நீதிமனறத்தில் வாதம்

சென்னை: பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸும், பீலா வெங்கடேசனும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் வாங்கிய பங்களா வீடு தற்போது இருவரும் பிரிந்ததால் பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ராஜேஷ் தாஸ் கடந்த 18ம் தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார். மேலும், தனது பெயரில் உள்ள தையூர் பங்களா வீட்டின் மின் இணைப்பை துண்டிக்குமாறு செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு பீலா வெங்கடேசன் கடிதம் அனுப்பினார்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் தையூர் பங்களாவிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெ.சத்யநாராயணா பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்த போது பீலா வெங்கடேசன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, வீட்டின் மின்சாரம் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுவிட்டதால் இந்த மனு செல்லத்தக்கது அல்ல. பீலா வெங்கடேசன் பெயரில் மின் இணைப்பு உள்ளதால் அதனை தற்காலிகமாக துண்டிக்குமாறு கோரிக்கை வைப்பதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. நிலத்தின் முக்கிய பகுதி பீலா வெங்கடேசனின் தந்தையின் பெயரில் இருந்தது. அதை அவரது பெயருக்கு மாற்றி தற்போது அந்த நிலத்தை குழந்தைகள் பெயருக்கு மாற்றியுள்ளார். ராஜேஷ் தாஸுக்கு சொந்தமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடும், பல இடங்களில் லாட்ஜ்களும் உள்ளதால் அவர் அங்கேயே தங்கி கொள்ளலாம் என்றார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மூன்றாம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

The post தையூர் பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்த ராஜேஷ்தாஸ் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் தரப்பு உயர் நீதிமனறத்தில் வாதம் appeared first on Dinakaran.

Tags : Rajeshdas' ,Taiyur ,Beela Venkatesan ,Chennai ,Madras High Court ,Special ,DGP ,Rajestas ,Rajeshdas ,Court ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி...