×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

உலகம் சுற்றும் மனசு…

ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கு, டோபமைன் அதிகப்படுத்தணும், அப்பதான் மூளை சுறுசுறுப்பாக மாறும். சரி, அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க, வேற என்ன டூர் போக வேண்டியது தான். இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்படி பேசுவதைத் தான் நாகரிகமாக நினைக்கிறார்கள். சரி, உண்மையில் மூளையை சுறுசுறுப்பாக இருக்கவைக்கும் டோபமைன் கெமிக்கல் அதிகமானால் என்னவாகும் என்று தெரியுமா? தெரியாது. இங்கு டூர் கிளம்ப வேண்டுமென்றால், நம்ம மக்களுக்கு விதம் விதமான காரணங்கள் இருக்கும். அந்தக் காரணங்களை கேட்கும் பொழுதே, எதிரில் இருப்பவர்களின் மனதுக்குள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் சேர்ந்து உருவாகும்.

சிலருக்கு டூர் என்பது தினந்தோறும் இருக்கும் வாழ்வில் இருந்து தப்பித்து சில நாட்கள் வேறு ஒரு நேர அட்டவணையில் இருக்க உதவும். சிலருக்கு தங்களைப் பற்றிய குடும்பம் வைத்திருக்கும் பிம்பத்திற்கு முன்னால், அவர்களுடைய தயக்கங்கள், பயங்கள் எல்லாவற்றையும் தகர்ப்பதற்கு, எளிமையான விஷயமாக டூர் அமைந்து விடுகிறது. புது இடங்களிலுள்ள மனிதர்கள் எவ்வித முன் அனுமானம் இல்லாமல், தங்களைப் பார்ப்பதையும், தங்களோடு பேசுவதையும் அனுபவிக்க இந்த டூர் மிகவும் நல்ல வாய்ப்பாக அமைகிறது.

சிலருக்கு புதுப்புது உறவுகளை கையாள்வதற்கும், புதிய மனிதர்களுடன் பழகுவதற்கும் இந்த டூர் முக்கியமானதாக இருக்கிறது. இவை எல்லாம் போக, சிலருக்கு டூர் போவதற்கு காரணமாக அவர்களது பணபலத்தையும், வர்க்க அதிகாரத்தையும் காண்பிப்பதற்கும் டூர் முக்கியமான ஆயுதமாக இன்று மாறி இருக்கிறது. இதனால் இந்த டூருக்கு செலவு செய்வது என்பது, ஒரு கல்யாணத்திற்கான செலவு போல் செய்வார்கள். அதாவது, திருமணத்திற்காகும் அதீத செலவு என்பது அர்த்தமில்லை. தனக்கான குடும்பம், தனக்கான துணை என்பது போல், ஒவ்வொரு ஊரையும் சொந்தம் கொண்டாடி, அதீத பாசம் வைத்து, தனக்கே தனக்கான இடமாக பார்க்கும் மனப்பான்மைதான் இளைஞர்களுக்கு அதிகம் என்று உளவியல் ஆய்வில் விவரிக்கிறார்கள்.

சிலருக்கு சாப்பாட்டின் மீது ஈடுபாடு அதிகமாக இருக்கும்போது, சாப்பாட்டிற்காக பல கிலோ மீட்டர் பயணம் செய்து, அந்தச் சாப்பாடு கிடைக்கும் இடத்தில், வாடகைக்கு தங்குவதற்கு ரூம் எடுத்து, அந்த ஊரிலுள்ள விதம் விதமான சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடுவார்கள். அந்தச் சாப்பாடு நன்றாக இருக்கிறது என்பதற்காக, அந்தச் சாப்பாடு கிடைக்கும் இடத்தில் இருந்து, அங்கு வேலை செய்யும் மனிதர்கள், அங்கு உபயோகப்படுத்தப்படும் பாத்திரங்கள், மேஜைகள் வரை அனைத்தையும் வீடியோவாக மாற்றி, கல்யாண கேசட் போல், அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் காண்பித்து விடுவார்கள்.

இம்மாதிரி டூர் போகிறவர்கள் கூறும் கதைகளில் இருந்து நாமும், டூர் போவதை சந்தோசமான அனுபவமாகத்தான் பார்க்கப் பழகுவோம். இந்தியாவைப் பொறுத்தவரையில் டூரிசத்தில் உள்ள, சர்வீஸ் உலகளவில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. முறையான போக்குவரத்து, தங்குமிடங்கள், உணவகங்கள், மருத்துவ வசதிகள் என்று அனைத்துமே தெளிவாக இருக்கிறது. அதனால் ஒரு ரெண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை வந்து விட்டால் போதும், எங்காவது டூர் போக வேண்டும் என்ற மனப்பான்மை அதிகரித்து விட்டது. அது சரியா, தவறா என்ற விவாதத்துக்குள் வரவில்லை.

ஆனால் வேர்ல்ட் டிராவல் மற்றும் டூரிசம் கவுன்சிலில் இருந்து இந்தியாவில் டூர் போவது ஒன்றும் அத்தனை பாதுகாப்பான நாடாக இல்லை என்று அறிவித்திருக்கிறது. இங்கு தான் மக்களுக்கும், சமூகத்துக்கும் டூர் பற்றிய பயம் ஏற்படுகிறது. ஏனென்றால், ஒரு மனிதன் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் போது, டூர் சென்றால் நன்றாக இருக்கும் என்று கூறும் நபர்களைப் பார்க்கும் பொழுது தான், பயமாக இருக்கிறது என்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் மூன்றில் ஒருவருக்கு மனப் பதற்றமும், மன அழுத்தமும் இருக்கிறது.

ஸ்ட்ரெஸ்ஸாக இருந்தால் தினந்தோறும் இருக்கும் இடத்தை விட்டு, வேறு இடத்தில் இருப்பது ஒரு வித நிம்மதியைத் தரும் என்பது உண்மை தான். ஆனால் எல்லாருக்குமே ஸ்ட்ரெஸ் என்றால், பயணம் என்பது பொதுத்திணிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் ஸ்ட்ரெஸ் ஆகும் போது, அதைச் சரி செய்ய பல செயல்கள் உதவியாக இருக்கும். உதாரணத்திற்கு சிலருக்கு வீட்டிற்குள், அவர்களது அறைக்குள் அமைதியாக இருந்தால் மட்டும் போதுமானது. சிலருக்கு பிடித்த சாப்பாட்டை சமைத்து, நண்பர்கள்கூட அந்த ஒரு சில மணி நேரம் செலவிட்டாலே போதுமானது. சிலருக்கு பிடித்த கோவிலுக்கு போவது, சிலருக்கு பிடித்த படத்தைப் பார்ப்பது, சிலருக்கு வண்டி ஓட்டுவது, சிலருக்கு பாட்டு கேட்பது, சிலருக்கு புத்தகம் படிப்பது என்று அதற்கான நேரத்தைக் கொடுத்தாலே போதுமானது என்பார்கள்.

அவை எல்லாம் மீறி ஸ்ட்ரெஸால் அவதிப்படும்போது, டூரில் ஒரு சிலருக்கு உடல் ரீதியான சோர்வால் வாந்தி வரலாம், எதற்கு கோபம் வருகிறது என்பது தெரியாமலே தொடர்ந்து கோபம் ஏற்படலாம், சிலருக்கு பயணச்சோர்வு மற்றும் சரியான தூக்கமின்மையால் புலம்பிக் கொண்டும், கத்திக்கொண்டும் இருக்கலாம், சிலருக்கு பயணம் போன இடம், சாப்பாடு பிடிக்காமல் இருக்கலாம், அதனால் ஸ்ட்ரெஸ்ஸோடு, பிடிக்காத இடமும் சேரும் போது, சொல்லத் தெரியாமல் தொடர்ந்து அழுகை வரலாம்.

ஸ்ட்ரெஸ் என்றாலே பயணம் என்பதும், அதனால் மூளை சுறுசுறுப்பு அடையும் என்பதும் ஒருவித மூட நம்பிக்கையாகத் தான் இருக்கிறது. அதனால்தான் பயணத்திற்கு செல்லும் முன், நண்பர்களுக்காக செல்கிறேன் என்று போகக் கூடாது என்கிறோம். இதன் விபரீதம் எப்படி இருக்கும் என்றால், சில நேரங்களில் ஆல்கஹால் எடுத்துக் கொண்டு அளவுக்கு அதிகமான சத்தத்துடன் கத்துவதும், எந்த ஊருக்குச் செல்கிறார்களோ அங்கு போய் சண்டை போடுவதும், அதனால் போலீஸ் கேஸ் ஆவதும், சில நேரங்களில் மலை உச்சியில் நின்று கொண்டும் அல்லது கடலுக்குள் விபரீத முயற்சியை செய்து பார்ப்பதும் வாடிக்கையாகி இருக்கிறது. இந்த அழுத்தங்களால், இவர்கள் செய்யும் செயல்களால், மற்ற சுற்றலாப் பயணிகளும் அவதிப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பால், பல குடும்பங்களுக்குள், நண்பர்களுக்குள் பயணத்திற்கு பின், பிரிவினை அதிகரிப்பதாக சுற்றுலாத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

வயதுக்கே உரிய திரில்லர் என்றாலும், அதோடு மனமும் நிதானமாக இல்லாமல் இருக்கும்போது, பயணம் புத்துணர்ச்சியைக் கொடுக்காமல், ஒரு வித பயத்தை பரிசாக கொடுத்து விடும் சூழல் தான் மாறியுள்ளது. எல்லா நேரங்களிலும், எல்லாருக்கும் பயணம் டோபமைனை தராது என்பதைப் புரிந்து கொண்டால் போதும். பயணத்தில் இருந்து முறையாக, தெளிவாக ஒரு நல்ல அனுபவத்தை பெற முடியும்.

அதுவே மூளையை சுறுசுறுப்பாக்கும். வேறு மாநிலத்திலிருந்தும், வேறு நாட்டிலிருந்து வருபவர்களுக்கும், நம் சமூக மக்களுக்கும் பயணம் சார்ந்த இடங்களை நல்ல விதமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருக்கிறது.கிளினிக்கல் ஸ்ட்ரெஸ் என்பது வேறு. சாதாரணமாக ஒரு சில விஷயங்களால் நாம் ஸ்ட்ரெஸ்ஸாக இருப்பது வேறு. அதனால் நம் ஸ்ட்ரெஸை வேறு எங்கேயாவது கைமாற்றி விடாமல், நம் ஸ்ட்ரெஸை நாமே கையாளத் தெரிந்திருக்க பழகிக் கொள்ளுங்கள்.

 

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED இளைஞர்களை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்!