×

அடுத்த வருடம் ரேஸ் டிராக்கில் பைக்குடன் பறப்பேன்!

நன்றி குங்குமம் தோழி

பைக்கர் சுஷ்மிதா ரமேஷ்

வாழ்க்கையில் ஒரு முறை யாவது ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டணும். அதில் ஜெயிக்கணும்னு அவசியமில்லை. ஆனா, டிராக்கில் பறக்கும் அனுபவத்தை உணரணும். அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறேன். கண்டிப்பா அடுத்த வருடம் என்னை பைக்குடன் டிராக்கில் பார்க்கலாம்’’ என்றார் சுஷ்மிதா ரமேஷ். சென்னைவாசியான இவர்தான் இப்போது இணையத்தில் ஹாட் டாக். இவர் தமிழ்நாட்டில் முதல் முறையாக அறிமுகமான ஏப்ரில்லா RS457 சூப்பர் பைக்கினை முதல் நபராக தன் வசமாக்கிக் கொண்டுள்ளார்.

‘‘நான் அடிப்படையில் பல் மருத்துவர். ஆனால் பைக் மேல் எனக்கு தீராக் காதல் உண்டு. நான் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே அந்த காதல் மலர்ந்ததுன்னு சொல்லணும். அப்பாவுடன் பைக்கில் போகும் போது, அவர் வளைந்து அந்த பைக்கினை ஓட்டும் போது ரொம்பவே ஜாலியா இருக்கும். உடன் உட்கார்ந்து போகும் போதே இவ்வளவு சுவாரஸ்யமா இருக்கே. நாமளும் அதே போன்ற கியர் பைக் ஓட்டினா எப்படி இருக்கும்னுதான் என் மனசுக்குள் ஒரு எண்ணம் எட்டிப் பார்த்தது. அப்ப முடிவு செய்தேன்…

ஓட்டினா கியர் பைக்தான் ஓட்டணும்னு. +2 படிக்கும் போது, என் நண்பர்களின் பைக்கினை வாங்கி ஓட்டிதான் கொஞ்சம் கொஞ்சமா பைக் ஓட்ட கத்துக்கிட்டேன். எல்லா ரக பைக்கும் நான் ஓட்டியிருக்கேன். நாமதான் நல்லா ஓட்டறோமே… நமக்கான பைக் வாங்கலாம்னு வீட்டில் சொன்ன போது, அம்மா இப்ப பைக் எல்லாம் வேணாம். நீ முதல்ல ஸ்கூட்டி ஓட்டி பழகிக்கோன்னு சொல்லிட்டாங்க. அவங்களுக்கு தெரியாது நான் கியர் பைக் எல்லாம் ஓட்டுவேன்னு.

ஆனா, அப்பப்ப நான் கியர் பைக் ஓட்டும் வீடியோவை அம்மாவிடம் காண்பிப்பேன். அதைப் பார்த்து அம்மாவும் எனக்கு பைக் மேல் இருக்கும் விருப்பத்தை புரிந்து கொண்டாங்க. இதற்கிடையில் என் படிப்பும் முடிந்தது. பல் மருத்துவராக பிராக்டீஸும் செய்து வந்தேன். வீட்டில் திருமணம் நிச்சயம் செய்தாங்க’’ என்றவரின் கணவர் திருமண நிச்சயதார்த்தத்தின் போது, அவருக்கு பிடித்த பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

‘‘எங்களுக்கு நிச்சயம் ஆன போது, என் கணவரும் நான் பைக் மேல் பைத்தியமா இருக்கேன்னு புரிந்து கொண்டார். அதனால் எனக்கு சர்ப்பிரைஸ் செய்ய எங்க நிச்சயத்தின் போது யமஹா MT15, 155cc பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார். கல்யாணத்திற்கு முன்பு வரை நண்பர்களின் பைக் தான் ஓட்டிப் பழகி இருக்கேன். எனக்கான பைக் என்று அவர்தான் முதல் முறையா வாங்கிக் கொடுத்தார். திருமணமான பிறகு என்னுடைய முதல் பிறந்தநாளுக்கு கவாசாக்கியின் Z900 946cc பைக்கை பரிசளித்தார்.

இது சூப்பர் பைக் வகையினை சேர்ந்தது. அதாவது சில சூப்பர் பைக்குகளை ஓட்டும் போது ‘சை’ன்னு ஒரு சத்தம் கேட்கும். அப்படி சத்தம் எழுப்பக்கூடிய பைக்தான் இது. நானும் இவரும் வெளியே போகும் போது இது போன்ற பைக்கினை ஓட்டிச் செல்பவர்களை பார்க்கும் போது எல்லாம் எனக்குள் இப்படி ஒரு பைக்கை ஓட்டமாட்டோமான்னு ஏக்கமா இருக்கும். அந்த பைக் என் வீட்டு முன் நின்ற போது, ரொம்ப பிரமிப்பா இருந்தது. அது சூப்பர் பைக் என்பதால், என்னால் நகரத்தின் டிராப்பிக்கில் பெரிய அளவில் ஓட்ட முடியாது. வெளியூருக்கு போகும் போதுதான் எடுத்துச் செல்வோம். இதற்கிடையில் நான் கருத்தரித்தேன். அந்த சமயத்தில் சாதாரணமா ஸ்கூட்டியே ஓட்டக்கூடாதுன்னு சொல்வாங்க.

இது போன்ற சூப்பர் பைக் பக்கம் எல்லாம் போகவே கூடாதுன்னு டாக்டர் ரொம்பவே ஸ்ட்ரிக்டா ெசால்லிட்டார். அதனால் நான் கரு தரித்து பாப்பா பிறக்கும் அந்த ஒரு வருட காலம் பைக் பக்கம் போகவே இல்லை. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன்’’ என்றவர் தமிழ்நாட்டில் புதிதாக அறிமுகமான மாடல் பைக்கினை முதல் நபராக வாங்கிய அனுபவங்களை பகிர்ந்தார்.

‘‘எனக்கு நிறங்களில் பர்பில் ரொம்ப பிடிக்கும். அந்த நிறத்தில் பைக் வாங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. சிலர் தங்களுக்கு பிடித்த நிறத்திற்கு ஏற்ப பைக்கின் நிறத்தை மாற்றுவாங்க. எனக்கு அதில் ஈடுபாடு இல்லை. அந்த பைக்கின் உண்மை தன்மை மறைந்திடும். அந்த சமயத்தில் தான் ஏப்ரில்லாவில் RS457, 457cc பைக்கினை அறிமுகம் செய்தாங்க. அதுவும் எனக்கு பிடிச்ச பர்பில் நிறம். மாடல் அறிமுகமாக இருப்பதை அறிந்து கொண்டு நாங்க முன்கூட்டியே புக் செய்திருந்தோம்.

தமிழ்நாட்டில் இந்த பைக்கினை ஓட்ட அனுமதி கிடைத்த பிறகு அதன் முதல் வண்டியை முதல் நபரா நாங்க வாங்கினோம். என் கணவர் இதைக் கொடுக்கும் போது பாப்பா பிறந்து இருந்ததால், முதல் அம்மாவா அறிமுகமான முதல் பைக்னு சொல்லிக் கொடுத்தார். எனக்கு அவர் முதலில் பரிசாக கொடுத்த MT பைக்கும் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகமான பைக். என்னுடைய பைக் அனைத்துமே அவர் தான் பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்திருக்கிறார். அடுத்து டிராக்கில் ஓட்ட பயிற்சி எடுக்க இருக்கிறேன். முறையாக பயிற்சி எடுத்தால்தான் அங்கு ஓட்ட முடியும். காரணம், டிராக்கில் ஓட்டும் போது பைக்கினை கன்ட்ரோல் செய்ய தெரியணும்.

நான் நிறைய பைக் ஓட்டியிருக்கேன். அதிகபட்சம் என்றால் நான் ஓட்டினது 1000cc பைக்தான். எல்லா வண்டியும் என்னால ஹாண்டில் செய்ய முடியும் போது டிராக்கிலும் ஓட்ட முடியும்னு நம்பிக்கை இருக்கு. என்னிடம் இருப்பது அனைத்தும் பவர்புல் பைக், சிட்டிக்குள் ஓட்ட முடியாது. இதில் நாலு சிலிண்டர் இருக்கும். லைட்டா ஆக்சிலேட்டர் கொடுத்தாலே 200cc வேகத்தில் வண்டி பறக்கும்.

அதனால் இந்த பைக் எப்ப எடுத்தாலும் கியர்ட் டிரஸ் ஜாக்கெட், காலில் ஷூ, ஜீன்ஸ் பேன்ட், ஹெல்மெட் எல்லாம் கண்டிப்பா போடணும். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சாதாரண பைக்கில் போவதற்கும் இந்த பைக்கில் போவதற்கும் நிறைய வித்தியாசம் தெரியும்’’ என்றவர் பைக் ஓட்டும் பெண்களுக்காக ஒரு குழுவினை அமைத்துள்ளார்.‘‘பைக் ஓட்ட ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் விரும்பறாங்க. அவர்களுக்காக ஒரு குழு அமைத்து அதில் பைக் ஓட்டும் பெண்களுக்கு உற்சாகம் கொடுக்க விரும்பினேன். ‘விமன் டிராட்லர்’ பெயரில் குழு ஆரம்பிச்சு ஆறு மாசமாகுது. இதில் பெரும்பாலும் திருமணமான பெண்கள்தான் உள்ளனர்.

குழுவில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்றாலும், நான் முதலில் அவர்களை ஆய்வு செய்வேன். காரணம், எங்களைப் போன்ற பைக்கர்கள் எல்லோரும் வெளியே ஒன்றாக போகும் போது, ஒருத்தரை ஒருத்தர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். முன் செல்லும் நபர் எதிரில் குழியோ அல்லது ஸ்பீட் பிரேக்கர் இருந்தாலும் பின் தொடர்பவர்களுக்கு சிக்னல் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவேளையில் சீரான வேகத்தில் போகும் போது, திடீரென்று தடங்கல் ஏற்பட்டால், வண்டியினை பேலன்ஸ் செய்ய முடியாமல் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அது அவர்களை பின் தொடர்பவர்களையும் பாதிக்கும் என்பதால், முன் செல்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்’’ என்றவர் ரேசிங் டிராக் குறித்தும் விவரித்தார்.

‘‘டிராக்கில் பைக் ஓட்ட விருப்பமாக இருந்தாலும் கொஞ்சம் பயம் இருக்கு. அந்த பயத்தை போக்கத்தான் நான் பயிற்சி எடுக்கிறேன். அதற்கான சான்றிதழ் பெற்றால்தான் டிராக்கில் பைக் ஓட்ட அனுமதி கிடைக்கும். பயிற்சியில் வேகமாக செல்லும் போது வளைவில் எவ்வாறு திருப்ப வேண்டும். வண்டியினை கன்ட்ரோல் செய்யும் விதம் என அனைத்து பயிற்சியும் இருக்கும். எனக்கு நார்மல் டெலிவரி என்பதால், பாப்பா பிறந்த மூணு மாசத்திலேயே பைக் ஓட்ட ஆரம்பிச்சிட்டேன்.

சிலர் இந்த பைக் ஓட்டினால் முதுகு வலி ஏற்படும்னு சொல்வாங்க. இந்த பைக் இல்லை எந்த பைக்காக இருந்தாலும் நாம் சரியான நிலையில் அமர்ந்து ஓட்டினால் எந்தப் பிரச்னையும் இருக்காது. ரொம்ப குனிந்து எல்லாம் ஓட்டக்கூடாது. சில சமயம் அதெல்லாம் தாண்டி வலி ஏற்படும். அந்த சமயம் அதற்கான உடற்பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு பைக் ஓட்டணும். அவ்வளவுதான். அதற்காக நான் முதலில் பெரிய வண்டி ஓட்ட ஆரம்பிக்கல. என்னுடைய பைக்கின் ccயின் அளவினை 150cc யில் ஆரம்பித்து 300cc, 500cc, 1000cc என கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தான் ஒவ்வொரு பைக்காக ஓட்டப் பழகினேன்.

அப்பாவைப் பார்த்துதான் எனக்கு பைக் ஓட்டணும்னு ஆசை வந்தது. அதே சமயம் நான் இவ்வளவு தூரம் பைக் ஓட்ட எனக்கு முழு சப்போர்ட்டா இருப்பது அம்மாதான். என் படிப்பு, வேலை, பாப்பா பிறக்கும் போதும் அம்மாதான் கூட இருந்தாங்க. கோவிட் பாதிப்பு காலத்திலும் நான் என் வேலையில் இருந்து விலகவில்லை. உறவினர்கள் எல்லாரும் இந்த சமயத்தில் வேலை அவசியமான்னு கேட்டாங்க.

அப்போது தைரியம் சொல்லி எனக்கு பாதுகாப்பா இருந்தது அம்மாதான். அதே போல இப்படிப்பட்ட பைக் எல்லாம் ஓட்டணுமான்னு மற்றவர்கள் கேட்ட போது எனக்கு ஆதரவா இருந்தது என் அண்ணன்தான். அவங்க நமக்கு பிடிச்சதை செய்யணும்னு சொல்வாங்க. என்னையும் அண்ணாவையும் படிப்பு, வேலை மட்டுமில்லாமல் எங்களின் விருப்பத்திற்கும் முழு ஆதரவு கொடுத்தது அம்மாதான்.

நான் பைக் ஓட்டிய காலத்தில் சொல்லித்தர யாருமில்லை. நானாகத்தான் கற்றுக் கொண்டேன். ஆனால் இன்று பெண்களுக்கு பைக் ஓட்ட சொல்லித்தர பல பயிற்சி மையங்கள் உள்ளன. அதைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் பைக் ஓட்ட முன் வரணும்’’ என்றார் சுஷ்மிதா.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்

The post அடுத்த வருடம் ரேஸ் டிராக்கில் பைக்குடன் பறப்பேன்! appeared first on Dinakaran.

Tags : Sushmita Ramesh ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சியும் ஆனந்தமும் முக்கியம்