×

சந்தோஷ வாழ்க்கை தரும் வசியப் பொருத்தம்!

‘‘என்ன மந்திரம் பண்ணாளோ, மாயம் பண்ணாளோ… தெரியாது! அவ காலடியிலயே மயங்கிக் கிடக்கிறான்’’ என்று சில தாய்மார்கள் தம் மகனை மருமகள் கடத்தியதுபோல பொருமித் தள்ளினால் அங்கு வசியப் பொருத்தம் வலுவாக உள்ளது என்று அர்த்தம். ‘‘எங்கேயோ கல்யாணத்துல பார்த்துக்கிட்டாங்களாம். இவன் நம்பர் கேட்டிருக்கான்… அவளும் கொடுத்திருக்கா. இப்போ அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேங்கறான்’’ என்றால், ராசிகளுக்குள் வசீகரித்துக் கொண்டு விட்டன என்று பொருள். ‘‘அவ வச்ச சாம்பார்ல சுத்தமா உப்பே போறலை. ‘எப்படிடா இருக்கு’ன்னு கேட்டா, ‘நீ இதுவரைக்கும் இந்த மாதிரி பண்ணுனதேயில்லை’ன்னு சொல்றியே?’’ என்று அம்மா அங்கலாய்க்கிற அளவுக்கு நாக்கையும் கண்ணையும் செயலிழக்கச் செய்யும் பொருத்தம்தான் வசியம்.வசியப் பொருத்தத்தின் மிகப் பெரிய பலமே ஊடலும் கூடலும்தான்.

‘‘இப்போதான் பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் எலியும் பூனையுமா சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்போ சிரிச்சுக்கிட்டு ஜோடியா வெளியில போறாங்களே’’ என்பதற்குப் பின்னால் வசியம் உள்ளது. ‘‘என்ன வசியம் போட்டாளோ’’ என்று சொல்கிறார்கள் அல்லவா… அந்த வசியத்தை யாரும் செய்ய முடியாது. ராசிகளுக்குள் ஏற்படும் ஈர்ப்புதான் அது. காதலிப்பது வரை ஈர்ப்பு இருக்கும். திருமணத்திற்குப் பிறகு, ‘எப்படி நாம காதலிச்சோம்’ என்று நொந்துகொள்வோரின் வேதனைகளுக்குப் பின்னால் வசியப் பொருத்தம் பலமிழந்து கிடக்கும்.

ஊரே கூடி குற்றவாளி என்றாலும், ‘என் புருஷன் நிரபராதிதான்’ என்கிற போராட்டத்தின் பின்னால் வசியப் பொருத்தம் இருக்கிறது. வசியப்பொருத்தம் இருந்தால், உறவினர்கள், நண்பர்களின் மத்தியில் ரகசியமான விஷயங்களை எவருக்கும் புரியாது பார்வை பரிபாஷையில் பரிமாறும் சாமர்த்தியம் தானாக வரும். ‘‘நீ எம்.ஏ. படிச்சிருக்கே… அவரு பி.ஏ.வை முடிக்கவே இல்லை. இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிட்ட. உங்களுக்குள்ள ஈகோ பிராப்ளமே வராதா?’’‘‘என் படிப்பைவிட அவரு குணத்துலயும், மனசுலேயும் பி.எச்.டியே பண்ணியிருக்காரு’’ என்று பேச வைப்பதெல்லாம் நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் பரஸ்பரம் இருக்கும் வசியம்தான்.

‘‘ரெண்டு பேரும் டாக்டர்ஸ். கைநிறைய சம்பாதிக்கறாங்க. கல கலப்பா சிரிச்சுப் பேசி நான் பார்த்ததேயில்லை’’ என்று யாரேனும் குறைப்பட்டுக் கொண்டால், அங்கே வசியப் பொருத்தம் குறைகிறது என்று அர்த்தம். ‘காதலுக்குக் கண்ணில்லை’ என்று சொல்கிற மாதிரி, வசியப் பொருத்தம் இருக்கும் தம்பதியரிடையே விட்டுக் கொடுக்கும் போக்கு அளவுக்கு அதிகமாக இருக்கும். ‘‘எவ்ளோ பணம் தர்றேன்னு சொன்னாலும் ஓவர் டைம் பார்க்க ஒத்துக்க மாட்டறாரு’’ என்று வீட்டுக்கு ஓடும் கணவன்மார்களின் வேகத்திற்குக் காரணம் கூட வசியப் பொருத்தம்தான். ‘‘அறுபது வயசாகுது. எங்க போனாலும் வீட்டுக்காரம்மாவை கூட்டிக்கிட்டுப் போவாரு… ரெண்டு நாள் சேர்ந்தாமாதிரி அவங்க ஊருக்குப் போயிட்டா இவரும் பின்னாடியே போயிடறாரு…’’ என்பதும் இதுதான்.

இரண்டு நாள் பிரிவு கூட வெகுநாட்களாகத் தோன்றும். இப்படி எந்தெந்த ராசிகளுக்குள் வசியப் பொருத்தம் என்பதைப் பார்ப்போமா. பொதுவாகவே எல்லாப் பொருத்தமும் பெண்ணுக்குத்தான் பார்க்க வேண்டும். அதுபோலவே கீழே கொடுக்கப்பட்டுள்ள பெண்ணின் ராசிகளுக்கு, எந்தெந்த ஆணின் ராசிகள் பொருந்தி வரும் என்று பார்க்கலாம். மேஷத்தை சிம்மமும் விருச்சிகமும் வசியம் பெற வைக்கின்றன என்று நூல்கள் கூறும். ஆனால், மேஷத்திற்கும் விருச்சிகத்திற்கும் ஈகோ பிரச்னை வரத்தான் செய்யும். ‘‘என்னமோ அவரு குணம் அப்படி.

மத்தபடி நல்லவருதான்’’ என்று அவ்வப்போது அலுத்துக் கொள்வர். பொதுவாக, மேஷத்திற்கு சிம்மம்தான் பெஸ்ட் சாய்ஸ். ரிஷப ராசிப் பெண்ணுக்கு கடகமும், துலாமும் வசியத்தைத் தரும். அதிலும் கடகம் இன்னும் கூட்டித் தரும். ஏனெனில், சந்திரன் ரிஷபத்தில் உச்சமாகிறார். கடகத்தை சந்திரன் ஆட்சி செய்கிறார். ‘‘எப்போ பார்த்தாலும் அவங்க ரெண்டு பேரும் ஜிலுஜிலுன்னு வெளிய கிளம்பிடறாங்க’’ என்று அக்கம்பக்கத்தார் வியப்பார்கள். ஆனால், துலாத்தினுடைய யதார்த்தமான பேச்சும் ரிஷபத்தினுடைய கற்பனையும் முரண்படும். ரிஷபம் ஏதேனும் ஒன்றில் டீப் ஆக இறங்கி தன்னை மறக்கும். ஆனால் துலாம் எல்லாவற்றையும் பார்க்க விரும்பும். ரிஷபம் பார்த்தது, கேட்டது, ரசித்தது என்றும், ‘‘என்னமா சொல்லியிருக்கறார் பாரேன்’’ என்றால் துலாம் உடனே எதிர்த்துப் பேசுவார்கள். ‘‘ஒரு வேலை குனிஞ்சு நிமிர்ந்து செய்யாதீங்க.

அப்பப்போ எதையாவது எடுத்து வச்சுட்டு அவர் சொன்னார்… இவர் சொன்னார்னு ஊர் விஷயத்தைப் பேசறதுலயே இருங்க’’ என்று நிஷ்டூரமாகப் பேசுவார்கள். எனவே ரிஷபத்திற்கு கடகம் கிடைக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லையெனில் துலாத்தோடு சேருங்கள். மிதுன ராசிக்கு கன்னியும், மீனமும் வசியங்களாகும். ஆனால், முதல் வாய்ப்பை கன்னி ராசிக்கு கொடுங்கள். ஏனெனில், கன்னி, மிதுனம் இவை இரண்டும் புதன் ஆட்சி செய்யும் வீடுகளாகும். புதனின் ஆட்சி பெற்ற இவ்விரு ராசிகளுக்கும் அட்டகாசமாக ஒத்துப் போகும்.

ஆனால், மிதுனத்தோடு மீனம் சேர்க்கும்போது அறிவுபூர்வமான பேச்சால் ஈகோ அதிகரிக்கும். இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது பட்டிமன்றத்தில் பேசிக் கொள்வதுபோல இருக்கும். பேசிக்கொள்வதைப் பார்த்தால், ‘மறுநாளே பிரிந்து விடுவார்கள்’ போல இருக்கும். நடுவில் நிற்போர்கள் குழம்பி விடுவார்கள். பழைய நூல்கள் இரண்டும் வசியம் என்று கூறுகிறது. ஆனால், இவை முற்றிலும் நேரடியான வாழ்க்கை அனுபவத்தில் தரப்படும் விஷயங்களாகும். கடக ராசிப் பெண்ணுக்கு விருச்சிகமும், தனுசும் வசீகரிப்பவையாக இருக்கும். பெரியோர்கள், ‘நண்டுக்கு தேள் எப்போதும் நல்லது’ என்பார்கள். ஒருவருக்கொருவர் பலம், பலவீனங்களை அறிந்து வைத்திருப்பர்.

ஆனால், கடகமும் தனுசும் கரடுமுரடான சங்கடங்களை எதிர்கொள்வர். முனகிக்கொண்டே மூன்று நாள் பேசாமல் இருப்பது. ‘‘அவருக்குத்தான் எல்லாம் தெரியும்னு நினைச்சுக்கிட்டிருக்காரா? போனா போகுதுன்னு பார்க்கறேன். ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறாரு’’ என்று அவ்வப்போது சிறுசிறு மனத்தாங்கல் வந்து நீங்கும். சிம்ம ராசிப் பெண்ணுக்கு துலாம் ஆண் வசியமாகும். மென்மையாக உறவாடுவார்கள். அது கடற்கரையாக இருந்தாலும் சரி… கரம்கோர்த்து நடக்க மாட்டார்கள். தங்களை நாலுபேர் உற்றுப் பார்ப்பதை விரும்பாத தம்பதியராக இருப்பார்கள். அலுவலகம் இருக்கும் தெருவின் முனையிலேயே மனைவியை கணவர் இறக்கிவிட்டுப் போவதும் உண்டு.

அடுத்து கன்னி ராசிப் பெண்ணுக்கு மிதுனமும், மீனமும் வசியங்களாகும். ஏற்கனவே மிதுன ராசிக்கு சொன்ன பலன்களையே இதற்கும் எடுத்துக் கொள்ளுங்கள். துலாம் ராசிப் பெண்ணை மகரத்தார் வசீகரிப்பார். ஏனெனில் துலாத்தின் அதிபதியான சுக்கிரனும், மகரத்திற்கு அதிபதியான சனியும் நண்பர்கள். துலாம் திட்டமிடுவார்கள். மகரம் செயல்படுத்துவார்கள். ‘‘பேங்க்குக்கு போகணும்னு சொல்லிக்கிட்டிருந்தியே… நீ எங்கயும் போய் அலைய வேணாம். நானே செக்கை டெபாசிட் பண்ணிடறேன்’’ என்று பரஸ்பரம் உதவிக் கொள்வார்கள். இவர்களுக்குள் திருமணம் செய்து வைத்தால் பண விஷயங்களில் இருவருமே சரியாக நடந்து கொள்வார்கள். விருச்சிக ராசிப் பெண்ணை கடக ராசி ஆண் வசீகரிப்பார்.

ஏற்கனவே கடக ராசிக்குண்டான அதே பலன்கள் இதற்கும் பொருந்தி வரும். தனுசு ராசிப் பெண்ணுக்கு மீன ராசி ஆண் வசியமாவார். ஏனெனில், இருவருக்குமே ராசி அதிபதியாக குரு வருகிறார். ஆனால், காலப்போக்கில் இவர்கள் ஏதோ காரணத்தினால் பிரிந்து விடுகிறார்கள். பிள்ளைகளின் படிப்பாலோ… உத்யோகத்தின் பொருட்டோ… பிரிவு ஏற்பட்டு விடுகிறது. இவர்களுக்குள் வசியம் இருந்தாலும் ஜாதகத்தைப் பார்த்துத்தான் சேர்க்க வேண்டும். மகர ராசிப் பெண்ணுக்கு மேஷமும், கும்பமும் வசியங்களாகும். ஆனாலும், மகரத்திற்கு மேஷம்தான் சிறந்தது.

இரண்டு பேருமே சர ராசிகளாக இருக்கிறார்கள். இதனால் அடிக்கடி ஆரோக்கியமான விவாதங்கள் வரும். ஆரம்பத்தில் பார்வையும், பாதையும் வெவ்வேறாக இருந்ததால் கருத்து மோதல் ஏற்பட்டாலும், பிரச்னைகளுக்கு முடிவு கிட்டும்போது ஒத்துப்போய் விடுவார்கள். மகரமும் கும்பமும் வசியமாக இருந்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். சண்டை போடாமல் இருந்தால் தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கும். ஒன்று மன உளைச்சல், இல்லையெனில் உடல் உபாதை என்றிருக்கும். வீட்டுக்கு கணவர் வந்து விட்டால் வெறுப்பாகப் பேசுவார்கள். அலுவலக விஷயமாக வெளியூர் சென்று விட்டால், ‘‘எங்க இருக்கீங்க. எப்போ வருவீங்க. போன வாரம் வயித்து வலின்னு சொன்னீங்களே… இப்போ எப்படி இருக்கு’’ என்று வினோதமாகப் பேசிக் கொள்வார்கள். தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகுபோலத்தான் மகரமும் கும்பமும் நகரும்.

கும்ப ராசிப் பெண்ணுக்கு மேஷ ராசி வசியமாகும். மேஷம் ஆணையிடும்; கும்பம் அடங்கிக் கேட்கும். மேஷத்தின் துள்ளலையும் துடிப்பையும் கும்பம் ரசிக்கும். அதேபோல மீன ராசிப் பெண்ணுக்கு மகர ராசி வசியமாகும். இரண்டையும் ஜலராசி என்பார்கள். திடீரென்று இரண்டும் குழையும்; இழையும்; முட்டிக் கொள்ளும்; மோதி நிற்கும். இந்த ஜோடியை யாராவது பிரிக்க நினைத்தால், அவர்கள் காதில் பூதான் மிஞ்சும். வித்தியாசமான வசியம் கொண்ட ராசிகளாக இவை விளங்குகின்றன. வாழ்க்கையில் சலிப்பு தோன்றாமல் இருப்பதற்குத்தான் வசியப் பொருத்தமே பார்க்கப்படுகிறது. இந்த வசியப் பொருத்தம் நல்லபடி அமையவேண்டுமென்றாலும், வசியப் பொருத்தமே இல்லாத தம்பதியரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான தலம் கும்பகோணத்தை அடுத்த உப்பிலியப்பன் கோயிலாகும்.

மார்க்கண்டேய முனிவரின் மகளை பெருமாள் வயோதிக ரூபத்தில் ஆட்கொண்டு மணம் செய்த தலம் இது. ‘‘என் மகளுக்கு உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது’’ என்று மார்க்கண்டேயர் கூற… பெருமாள் ‘‘பரவாயில்லை. திருமணம் செய்து கொள்கிறேன்’’ என்று மணந்தார். அத்தனை தூரம் வசியம் பெற்ற தெய்வீகத் தம்பதியை நீங்களும் சென்று தரிசியுங்கள். கருவறையில் நெடிதுயர்ந்து நிற்கிறான் நிவாஸன். இரு திருக்கைகளில் திருவாழியும் திருச்சங்கும் ஏந்தியிருக்கிறான். திரு அரை எனும் இடுப்பில் ஒரு திருக்கையுடன், திரு முடியில் ஒளிபட்டு நாற்புறமும் பரவும் கிரீடம். திருமேனியில் அலையாகப் புரளும் மணியிலான அணிகலன்கள். திருவடியின் வலப்பக்கம் அகங் குழைந்து முகம் மலர்ந்திருக்கிறாள் மகாலக்ஷ்மி. திருமாலை மாப்பிள்ளையாகப் பெற்ற பாக்கியத்தை எங்ஙனம் விவரிப்பேன் என்று கைகூப்பி அமர்ந்திருக்கிறார், மாமனாரான மார்க்கண்டேயர். இந்த அற்புதக் கோலத்தை தரிசியுங்கள். கணவன் – மனைவிக்குள் இன்னும் ஒற்றுமை கூடுவதை அனுபவத்தில் உணர்வீர்கள்.

The post சந்தோஷ வாழ்க்கை தரும் வசியப் பொருத்தம்! appeared first on Dinakaran.

Tags : Ivan ,
× RELATED ஜனனி ஐயர் ஃபிட்னெஸ்