×

திருமங்கலம் அருகே பரிதாபம் வாகனங்களில் சிக்கி புள்ளி மான்கள் பலி

திருமங்கலம், மே 24: திருமங்கலம் அருகே வாகனங்களில் அடிபட்டு இரண்டு புள்ளி மான்கள் பரிதாபமாக உயிரிழந்தன. திருமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான மான்கள், காட்டு பன்றிகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது கிராமங்களுக்கு இரை, தண்ணீர் தேடி வருவது வழக்கம். இதுபேன்ற நேரங்களில் எதிர்பாராத வகையில் வாகனங்களில் அடிபட்டும், நாய்கள் கடித்தும் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

இதன்படி நேற்று காலை திருமங்கலம் அடுத்த மேலக்கோட்டை அருகே கரிசல்பட்டி விலக்கு மேம்பாலம் அருகே விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற 2 வயது ஆண் புள்ளி மான் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தது. தகவல் அறிந்த மேலக்கோட்டை விஏஓ ரமேஷ் மற்றும் பொதுமக்கள் மானை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் வனத்துறையினர் வருவதற்குள் மான் பரிதாபமாக உயிரிழந்தது.

இதேபோல் நேற்று திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை பெரியார் நகர் அருகே நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற ஒன்றரை வயது ஆண் புள்ளி மான் மீது அந்த வழியே சென்ற வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.  இறந்த மான்களின் உடல்களை சாப்டூர் வனத்துறையினர் உடற்கூராய்வு செய்து புதைத்தனர். திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ரோட்டை கடக்கும் வனவிலங்குகள் குறித்த எச்சரிக்கை பலகைகளை வனத்துறையினர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post திருமங்கலம் அருகே பரிதாபம் வாகனங்களில் சிக்கி புள்ளி மான்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Tirumangalam ,
× RELATED திருமங்கலம் அருகே பெட்ரோல், டீசல் கடத்தியவர் கைது