×

பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பு எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு: டான்ஜெட்கோ, பீலா வெங்கடேசன் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸும், பீலா வெங்கடேஷனும் தம்பதியர். இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் வாங்கிய பங்களா வீட்டில் வசித்து வந்தனர். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனால், பங்களாவுக்கு பீலா வெங்கடேஷ் காவலாளியை நியமித்துள்ளார். கடந்த 18ம் தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்த ராஜேஷ் தாஸ், காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக பீலா வெங்கடேசன் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். மேலும், தனது பெயரில் உள்ள பங்களாவின் மின் இணைப்பை துண்டிக்கும்படி, செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு பீலா வெங்கடேசன் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, அந்த பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்தும், மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அதில், விவகாரத்து தொடர்பான வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், எரிசக்தித் துறை செயலாளராக உள்ள பீலா வெங்கடேசன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அதிகாரிகளுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. ராஜேஷ் தாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், பங்களாவுக்கான வீட்டு கடன் மற்றும் மின் கட்டணத்தை ராஜேஷ் தாஸ் தான் செலுத்தி வருகிறார் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) மற்றும் பீலா வெங்கடேசனுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post பங்களாவின் மின் இணைப்பு துண்டிப்பு எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு: டான்ஜெட்கோ, பீலா வெங்கடேசன் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Rajesh Das ,Danjetco ,Billa Venkatesan ,CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Beela Venkatesan ,Dinakaran ,
× RELATED மின்இணைப்பு வழங்கக் கோரி மனு: ராஜேஷ் தாஸ் கோரிக்கை நிராகரிப்பு