×

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவத்தில் மீண்டும் தலைதூக்கிய வடகலை – தென்கலை வாக்குவாதம்: தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதி

சென்னை: கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் பாடுவதில் வடகலை- தென்கலை பிரிவினரிடையே ஆண்டாண்டு காலமாக பிரச்னை நீடித்து வருகிறது.

இது சம்மந்தமான வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, கோயில் விழாக்களில் தென்கலை, வடகலை என இரு பிரிவினரும் கோஷ்டிகள் பாட கூடாது என கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 20ம்தேதி வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 3ம் நாளான நேற்று முன்தினம் கருடசேவை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

4ம் நாளான நேற்று சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சங்கர மடம் பகுதியில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கங்கைகொண்டான் மண்டபத்தில் தாத்தாச்சாரி குடும்பத்தினர் மந்திர புஷ்பம் எனும் வேத மந்திரங்களை பாடி பூஜை செய்தனர்.

நாள்தோறும் தாத்தாச்சார்ய குடும்பத்தினர் வேத மந்திரங்களை பாடும்போது தென்கலை பிரிவினர் தாங்களும் வேத மந்திரங்களை பாடுவோம் எனக்கூறி கோயில் நிர்வாகத்தின் உத்தரவையும் மீறி தென்கலை பிரினவினர் வேத பாராயணம் செய்தனர். இதனால், இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிவகாஞ்சி போலீசார் சமரசம் செய்தபோது, கோயில் வளாகத்தில் மட்டுமே வேத பாராயணம் பாடத் தடை உள்ளது.

வெளியிடங்களில் பாடத் தடை இல்லை என்று தென்கலை பிரிவினர் வாதிட்ட நிலையில், தென்கலை பிரிவினர் வேத பாராயணம் செய்தால், வடகலை பிரிவினராகிய நாங்களும் வேத பாராயணம் செய்வோம் என 2 தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர்.

The post காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவத்தில் மீண்டும் தலைதூக்கிய வடகலை – தென்கலை வாக்குவாதம்: தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Vadakalai-Tenkalai ,Kanchipuram Varadaraja ,Perumal Temple ,CHENNAI ,Kanchipuram Varadaraja Perumal Temple ,Kanchi ,Vadakalai ,Tenkalai ,Kanchipuram ,Varadaraja… ,
× RELATED வரதராஜ பெருமாள் கோயில் கருடசேவை...