×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து: அதிகாரிகள் விசாரணை

சென்னை: சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகளை ஒருங்கிணைக்கும் ஏர் டிராபிக் கண்ட்ரோல் அலுவலகம் (ஏடிசி டவர்) அமைந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், விமான நிலையத்தில் தரையிறங்காமல் சென்னை வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உள்பட அனைத்து விமான சேவைகளையும் கண்காணித்து இயக்கி வரும் மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட இடம் ஏடிசி டவர்.

இது 24 மணி நேரமும் இடைவிடாமல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ஏடிசி டவரின் 4வது தளம் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கு அவசர தகவல் கொடுத்தனர். இதனையடுத்து தீயணைப்பு பிரிவின், 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மொட்டை மாடியில் உள்ள அறையில், பழைய கழிவு பொருட்கள் மற்றும் தேவை இல்லாத பொருட்களை போட்டு வைத்திருந்ததாகவும், அந்த அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் விமான கட்டுப்பாட்டு அறைக்கோ, விமான சேவைகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் விமான நிலையத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஏடிசி டவரில் திடீர் தீ விபத்து நடந்தது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு கட்டுப்பாட்டு அறையில் திடீர் தீ விபத்து: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sudden fire ,Chennai airport ,CHENNAI ,Air Traffic Control Office ,ATC Tower ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்