×

சென்னை என்ஐஏ அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: மர்மநபரை தேடி ம.பி. விரைகிறது போலீஸ்

சென்னை: சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, பிரதமர் மோடியை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி சென்னை சைபர் க்ரைம் போலீசார் மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர். சென்னை புரசைவாக்கத்தில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், இந்தியில் ‘தேர்தல் பிரசாரத்தின் போது மோடியை கொல்வோம்’ என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத என்ஐஏ அதிகாரிகள் பதற்றமடைந்தனர். உடனே சம்பவம் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் இதனை விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து என்ஐஏ அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை வைத்து ஆய்வு செய்த போது, அது மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து வந்த அழைப்பு என தெரிந்தது. இதை தொடர்ந்து, மோடிக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி தனிப்படை ஒன்று மத்தியபிரதேசம் விரைந்துள்ளது.

The post சென்னை என்ஐஏ அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: மர்மநபரை தேடி ம.பி. விரைகிறது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Modi ,NIA ,Chennai ,Madhya Pradesh Cyber Crime Police ,National Investigation Agency ,Purasaivakam, Chennai ,
× RELATED இது மோடி 3.0 என்று சிலர்...