×

குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து வழக்கு; பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய யுடியூபர் சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார். என்னவெல்லாம் செய்ய மாட்டார் என்று உத்தரவாதம் அளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு யுடியூபர் சங்கருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு எதிர்த்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளிவைத்துள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யுடியூபர் சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்று கோரி சங்கரின் தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை. சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நேற்று காலை 10.40 மணிக்கு விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, யுடியூபர் சங்கர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, நீதிபதிகள் யுடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் பிற்பகல் 2.15 மணிக்கு தாக்கல் செய்யுமாறு சென்னை போலீஸ் கமிஷனர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

வழக்கு, பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்பு நாளை விசாரிப்பதாகக் கூறி விசாரணையை தள்ளிவைத்தனர். இதேபோல, கோவை சிறையில் சங்கர் தாக்கப்பட்டதாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதும் நாளை விசாரிக்கப்படும் என்றனர். அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க இதில் என்ற சிறப்பு உள்ளது என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார். என்னவெல்லாம் செய்ய மாட்டார் எனவும் உத்தரவாதம் அளித்து சங்கர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும். முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார். அதை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக அவரை உடனே சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர் அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து வழக்கு; பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய யுடியூபர் சங்கருக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : iCourt ,YouTuber ,Shankar ,Chennai ,Madras High Court ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில்...