×

3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் பிடிபட்டார்: கோயிலில் போலீசார் சுற்றிவளைத்தனர்

புழல்: 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வதாக ஒரு பெண்ணை கோயிலில் மணமுடிக்கவிருந்த கல்யாண மன்னனை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் காவல்நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 2வது தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (37). இவர் ஆட்டோ டிரைவர். இவரது முதல் மனைவி கலைச்செல்வி. 2வதாக லட்சுமி என்பவரை திருமணம் செய்தார். இதன்பிறகு தனது 2 மனைவிகளுக்கு தெரியாமல் 3வதாக பாடியநல்லூர் ஜோதி நகர் 12வது தெருவை சேர்ந்த அம்சவல்லி (36) என்பவரை மணமுடித்து குடும்பம் நடத்திவந்துள்ளார்.

இந்த நிலையில், முதல் 3 மனைவிகளுக்கு தெரியாமல் சென்னை எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த கவி என்பவரை 4வது திருமணம் செய்வதற்காக நேற்று காலை பாடியநல்லூரில் உள்ள அம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். இதனிடையே 3வது மனைவி அம்சவல்லிக்கு 4வது திருமணம் செய்வதற்காக வந்திருந்த கவி ரகசியமாக தகவல் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அம்சவல்லி மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக கோயிலுக்கு விரைந்து வந்து லட்சுமணனின் 4வது திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன் செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் வந்து 4வது திருமணம் செய்யவிருந்த லட்சுமணனை காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது 3வது மனைவி அம்சவல்லியும் 4வது திருமணம் செய்வதற்காக வந்திருந்த கவியும் போலீசாரிடம் “புகார் ஏதும் வேண்டாம். நாங்கள் சமாதானமாக சென்றுவிடுகிறோம்’’ என்று தெரிவித்தனர். இதையடுத்து லட்சுமணனை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

The post 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4வது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னன் பிடிபட்டார்: கோயிலில் போலீசார் சுற்றிவளைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Kalyana ,king ,Lakshmanan ,2nd street ,Vyasarpadi Sharma Nagar, Chennai.… ,
× RELATED பணம் வசூலிக்க சென்ற நிதிநிறுவன...