×

சென்னை விமானநிலையத்தில் கட்டுப்பாட்டு அறையின் ஏடிசி டவரில் தீ விபத்து

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள ஏடிசி டவரில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால், விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. எனினும், ஏடிசி டவரில் தீ விபத்து குறித்து விமானநிலைய உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை ஒருங்கிணைக்கும், ஏர் டிராபிக் கன்ட்ரோல் அலுவலகமாக ஏடிசி டவர் விளங்கி வருகிறது. இது, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்கள், தரையிறங்கும் விமானங்கள், சென்னையில் தரையிறங்காமல் வான்வெளியை கடந்து செல்லும் விமானங்கள் உள்பட அனைத்து விமான சேவைகளையும் கண்காணித்து இயக்கப்படும் மிக முக்கியமான, பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமானநிலைய ஏடிசி டவர் விளங்கி வருகிறது.

இந்த டவர் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும். இந்நிலையில், சென்னை விமானநிலைய ஏடிசி டவரின் 4வது தளத்தில் மொட்டை மாடி உள்ளது. இங்குள்ள ஒரு அறையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனால் ஏடிசி டவரில் இரவு பணி பார்த்து கொண்டிருந்த விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளிடையே பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை விமானநிலைய தீயணைப்பு பிரிவின் 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து, ஏடிசி டவரின் 4வது மாடியில் உள்ள அறையில் பரவிய தீயை, சுமார் 20 நிமிடங்களில் தண்ணீர் ஊற்றி முற்றிலும் அணைத்தனர். ஏடிசி டவரின் 4வது தளத்தில் உள்ள மொட்டை மாடி அறையில் பழைய, தேவையற்ற கழிவு பொருட்கள் போட்டு வைத்திருந்ததாகவும், அந்த அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

ஏடிசி டவரில் ஏற்பட்ட தீயை அதிகாரிகள் உடனடியாக கண்டறிந்து எடுத்த நடவடிக்கை காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தினால் விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கோ, விமான சேவைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், சென்னை விமான நிலையத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஏடிசி டவரில் தீ விபத்து சம்பவம் நடைபெற்றது குறித்து விமானநிலைய உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post சென்னை விமானநிலையத்தில் கட்டுப்பாட்டு அறையின் ஏடிசி டவரில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : ATC ,Chennai airport ,Meenambakkam ,ATC tower ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்