×

கூனிகளையும் சகுனிகளையும் அலட்சியப்படுத்திவிடாதீர்கள்!

பாரதத்தின் சிறப்புக்கு வேதங்கள், உபநிடதங்கள், காவியங்கள் என்று எத்தனையோ காரணங்கள் உண்டு. எல்லாவற்றையும்விட பெரும் சிறப்பு பாரதத்தில் இயற்றப்பட்ட இரண்டு இதிகாசங்கள்.
இதிகாசங்கள் என்றால் இப்படி
நடந்தது என்று பொருள்.
1. ராமாயணம்.
2. மகாபாரதம்.
ராமாயணம் திரேதாயுகத்திலும், மகாபாரதம் துவாபரயுகத்திலும் நடந்ததாகச் சொல்வார்கள். இந்த இரண்டு கதைகளும் மனித குலத்தின் மாண்பினை உயர்த்துவதற்காக இயற்றப்பட்ட உன்னத காவியங்கள். மகாபாரதம், ராமாயணம் போன்ற தலைசிறந்த கதைகள் போல உலகத்தில் வேறு எங்கும் இல்லை. ஆனால், இந்த இரண்டு இதிகாசங்களிலும் சில விஷயங்கள் ஒரே மாதிரியாகவே வரும். ராமாயணத்தில், ராமன் வனவாசம் போவதற்குக் காரணம் கைகேயி என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அந்த கைகேயியைத் தூண்டிவிட்டது மந்தரை என்கிற கூனி. அதைப் போலவே மகாபாரதத்தில், பஞ்சபாண்டவர்களை நாட்டைவிட்டு விரட்டி, காடு போகச் செய்தது துரியோதனன். அந்தத் துரியோதனனைத் தூபம் போட்டுத் தூண்டியது சகுனி. இன்றைக்கும் ஒவ்வொரு ஊரிலும் மந்தரைகளும் சகுனிகளும் உண்டு. ஒன்று பெண் பாத்திரம். இன்னொன்று ஆண் பாத்திரம். ஆனால், எண்ணத்தில் இருவரும் ஒருவர் போலவே செயல்படுவதைக் காணலாம். இவர்கள் இருவருமே தனிப்பட்ட முறையில் சக்தி அற்றவர்கள். ஆனால், சக்தி உடையவர்களைத் தூண்டி மிகப் பெரிய காரியங்களைச் செய்தவர்கள். கூனியையும் சகுனியையும், இப்படிச் செய்யத் தூண்டியது அவர்களின் சொந்த அவமானம், வெறுப்பு, பழிவாங்கும் குணம்.

கைகேயியைத் தூண்டிவிட்டு, மிகப் பெரிய கொந்தளிப்பை உண்டாக்கி, தேசத்தையே தலைகீழாக மாற்றியவள் கூனி. இந்த கூனி யார் என்பதை அயோத்தியா காண்டம் சர்கம் ஏழில் வால்மீகி விவரிக்கிறார். அவளுடைய பிறந்த ஊர் எது என்பது தெரியவில்லை. தாய், தந்தை இன்னார் என்று தெரியவில்லை. கைகேயியுடன் வெகு காலம் வசிப்பவள். கைகேயி திருமணம் முடிந்து அயோத்திக்கு வருகின்ற பொழுது அவளோடு கேகய நாட்டில் இருந்து வந்தவள். தோழி, ஆலோசகர் என்று எல்லாமுமாக இருப்பவள், கூனி.எதேச்சையாக கைகேயின் வீட்டு மாடியில் இருந்து அயோத்தி நகரத்தைப் பார்க்கிறாள். ராஜவீதிகள் குப்பை இல்லாமல் சுத்தமாக இருக்கிறது. தண்ணீர் தெளித்து அழகழகான கோலங்கள் போட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த வண்ணக் கொடிகளும், மற்ற மற்ற அலங்காரங்களும் ஆங்காங்கே அற்புதமாக செய்யப்பட்டிருந்தன. மக்கள் மங்கல ஸ்நானம் செய்து மிக அழகாக அலங்கரித்துக் கொண்டு அங்கும் இங்கும் போய்க்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கையில் புஷ்பமாலைகள், பணியாரங்கள், காணிக்கைப் பொருள்கள் இருந்தன. இவர்கள் தூரத்தில் ராமன் வசிக்கும் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தார்கள். எங்கும் வாத்திய தோஷம் கேட்டுக்கொண்டிருந்தது. பிராமணர்கள் வேதம் ஓதிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவையும் பார்த்த அவள், நகரத்தில் என்ன விசேஷம் என்று, அவளுக்குக் கீழ் உள்ள ஒரு வேலைக்காரியிடம் விசாரிக்கச் சொல்லி அனுப்புகின்றாள். அவள், ‘‘இது தெரியாதா உனக்கு? நாளை பூச நட்சத்திரத்தில் ராமனுக்கு பட்டாபிஷேகம். அதற்காகத்தான் இத்தனை அலங்காரங்களும்’’ என்று சொல்ல, கூனி அதிர்ச்சி அடைகின்றாள். அவளுக்கு ராமனிடம் விரோதம் பாராட்ட தனிப்பட்ட காரணம் இருந்தது. இதை கம்பன் ஒரு அழகான பாடலில் காட்டுகின்றார். ஆழ்வார்களும் இந்தக் கதையை ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
கூனி, ராமனை வெறுக்க என்ன காரணம்?

“தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயில் மேல்
மண்டினாள்; வெகுளியின் மடித்த
வாயினாள்;
பண்டை நாள், இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்’’

ராமன் தம்பிகளோடு விளையாடுகின்ற பொழுது, உண்டிவில்லை எறிந்து விளையாடினான். இப்பொழுதும் இந்த விளையாட்டு கிராமங்களில் உண்டு. வேட்டையாடுவதற்கும் இந்த கவண்டி வில் என்கின்ற கருவியை உபயோகப்படுத்துவார்கள். அதில் மண்ணுருண்டையை கட்டி விளையாட்டாக அடித்த பொழுது, கைகேயியின் வீட்டில் இருந்து வெளியே வந்த தாதிப் பெண்ணான கூனியின் முதுகில் பட்டுவிட்டது. எல்லோரும் சிரித்துவிட்டனர். இது இயல்பான ஒரு விளையாட்டுதான். ஆனால், கூனி உடனே ராமனை முறைத்துப் பார்க்கிறாள். இப்பொழுது ராமனோடு அவளால் சண்டை போட முடியாது. திட்ட முடியாது. காரணம் அவன் சக்கரவர்த்தியின் அன்பிற்குரிய திருமகன். கைகேயியின் ஆசைக்குரிய வளர்ப்புமகன். இருந்தாலும், அந்த சிறிய அடி அவளுடைய மனதில் வன்மத்தையும், பழிவாங்கும் உணர்வையும் ஏற்படுத்துகின்றது. அப்பொழுதே அவள் ராமனைத் திட்டி இருந்தாலும்கூட மறந்து போயிருக்கும். ஆனால், இது நெஞ்சில் விழுந்த வடுவாக மாறுகின்றது. இது நாளுக்கு நாள் வளர்கிறது. பழிவாங்கத் துடிக்கிறது. இது ஒரு கோணம். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு கோணமும் உண்டு.

எந்தக் காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டு. (cause behind an act) ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் அது வலுவற்ற காரணமாக இருந்தாலும், அதை விட்டுவிட முடியாது. ஒரு தாதிப் பெண்ணை, விளையாட்டாகச் சிறுவயதில், ராமன் மண்ணுருண்டையால் அடித்த செயலின் விளைவு, ராமனை அயோத்தி மண்ணை விட்டு காட்டுக்குச் செல்லும்படியான ஆற்றல் பெறும் என்பது யாரால் அனுமானிக்க முடியும்? எந்த வினையாக இருந்தாலும் அந்த வினையின் விளைவு என்பது ஏதோ ஒரு இடத்தில் வந்து சேரும். அது இறைவனாக இருந்தாலும்கூட. அவன் மனித வடிவு எடுத்து வருகின்ற பொழுது, இப்படி சில விஷயங்களையும் நமக்காக ஏற்றுக்கொள்ளுகின்றான். இன்னொரு விஷயம், இறைவனாக இருந்தாலும்கூட, அவன் மனித உருவம் எடுத்து வருகின்ற பொழுது அவனுக்கு எதிரிகளோ இடையூறு செய்பவர்களோ இல்லாமல் இருப்பதில்லை.அயோத்தியில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் ராமனை விரும்புகின்ற பொழுது ராமனை வெறுக்கின்ற ஒருத்தியும் இருந்தாள் என்பது ஆச்சரியமல்லவா! உண்டையினால் அடித்த வலி எப்பொழுதோ மறந்துபோயிருக்கும். ஆனால், கம்பன் சொல்லுவது, அவள் அந்த அடியை உடம்பில் மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை, மனதில் எடுத்துக்கொண்டாள். நல்வினையோ தீவினையோ, அது யார் செய்திருந்தாலும், ஏதோ ஒரு ரூபத்தில், ஏதோ ஒரு காலத்தில் வந்து சேரும் என்பது மந்தரை (கூனி) பாத்திரம் ராமாயணத்தின் மூலம் மக்களுக்குத் தருகின்ற செய்தி.

The post கூனிகளையும் சகுனிகளையும் அலட்சியப்படுத்திவிடாதீர்கள்! appeared first on Dinakaran.

Tags : Bharat ,
× RELATED 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் தேசம் வலிமை பெற்றுள்ளது: ஜே.பி.நட்டா