×

மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம்

மரக்காணம் : மரக்காணம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இவர்கள் தங்களது விளைநிலங்களில் பாரம்பரிய பயிர்களான நெல், மணிலா, மரவள்ளி, தர்பூசணி போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். இதுபோல் தொடர்ந்து ஒரே மாதிரியான பயிர்களை நடவு செய்வதால் பூச்சிகள் அதிக அளவில் தாக்குகிறது. இதன் காரணமாக மகசூல் குறைந்து விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உண்டாகிறது.

இதன் காரணமாக அதிக மகசூல் கொடுக்கக்கூடிய புதிய ரகங்களை பயிர் செய்து அதன்மூலம் அதிக லாபம் ஈட்டும் வகையில் வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகளும் புதிய கலப்பின பயிர்களை நடவு செய்ய துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் மரக்காணம் அருகே வண்டிப்பாளையம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த மரவள்ளி செடிகளை சொட்டு நீர் பாசன முறையில் நடவு செய்துள்ளனர். இப்பகுதியில் மிதமான மழையும் பெய்து வருவதால் இந்த மரவள்ளி செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. இந்த ரக மரவள்ளி செடிகளை பூச்சிகள் அதிகளவில் தாக்குவதில்லை. மேலும் சாதாரண மரவள்ளி ரகத்தைவிட இந்த மரவள்ளி செடிகள் அதிக மகசூல் கொடுக்கும். இதனால் லாபமும் அதிகளவில் இருக்கும் என்பதால் இந்த ரக மரவள்ளி செடிகளை பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருவதாக இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

The post மரக்காணம் பகுதியில் தாய்லாந்து நாட்டு மரவள்ளி பயிரிட விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Marakkanam ,Dinakaran ,
× RELATED மரக்காணம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்