*திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது
தர்மபுரி : நல்லம்பள்ளியில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
தர்மபுரியில் இருந்து 9 கி.மீ தொலைவில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் ஏ.ஜெட்டிஅள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, பண்டஅள்ளி, பேடரஅள்ளி, பொம்மசமுத்திரம், பூதனஅள்ளி, தளவாய்அள்ளி, தின்னஅள்ளி, டொக்குபோதனஅள்ளி, எச்சனஅள்ளி, ஏலகிரி, எர்ரபையனஅள்ளி, இண்டூர், கம்மம்பட்டி, கோணங்கிஅள்ளி, லலிகம், மாதேமங்கலம், மானியதஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, நாகர்கூடல், நல்லம்பள்ளி, நார்த்தம்பட்டி, பாகலஅள்ளி, பாலவாடி, பாளையம்புதூர், பங்குநத்தம், சாமிசெட்டிப்பட்டி, சிவாடி, சோமேனஅள்ளி, தடங்கம், தொப்பூர் ஆகிய 32 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன.
நல்லம்பள்ளி ஒன்றிய அலுவலகம் மூலம், இந்த 32 ஊராட்சி மன்றங்களில் உள்ள கிராம மக்களுக்கு, குடிநீர், தெருவிளக்கு, சாலைகள் அமைத்தல், புதிய கட்டுமானம், பராமரிப்பு, மராமத்துப் பணிகள் மேற்கொள்ளுதல், ஆரம்ப, நடுநிலைப் பள்ளிக்கூடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல், பொதுச் சந்தைகள் கட்டுதல் மற்றும் அதை பராமரித்தல் பணிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 பிடிஓ.,க்கள், ஒரு துணை பிடிஓ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போதுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம், 25 ஆண்டுகள் பழமையான கட்டிடமாகும். இடநெருக்கடியும் உள்ளது. இதையடுத்து, நிர்வாக வசதிக்காக புதிய கட்டிடம் பிடிஓ அலுவலக வளாகத்தில், ரூ.3.95 கோடி மதிப்பீட்டில், கடந்த 2 ஆண்டிற்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், புதிய கட்டிடம் திறப்பு விழா தாமதமாகி வருகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நல்லம்பள்ளியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நிர்வாக வசதிக்காக கட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3.95 கோடியாகும். மழைநீர் சேகரிப்பு தொட்டி தனியாக அமைக்கப்பட்டுள்ளது. 2 பிடிஓ.,க்கள் அறை, தலைவர் அறை, கவுன்சிலர்கள் கூட்டரங்கம், கணினி பிரிவு அறை, பொறியாளர் பிரிவு அறை, தணிக்கை பிரிவு அறை, சமூக நலத்துறை அலுவலகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு அறைகள் கொண்டு, நவீன வசதிகள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 32 கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும், இந்த அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும். தேர்தல் நடத்தை விதிமுறை முடிந்த பின்னர், புதிய அலுவலகம் அரசு மூலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.
The post நல்லம்பள்ளியில் ₹3.95 கோடியில் நவீன வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் appeared first on Dinakaran.