×

தொட்டபெட்டா சிகரத்திற்கு இன்று முதல் அனுமதி

*வனத்துறை அறிவிப்பு

ஊட்டி : ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திற்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி – கோத்தகிரி சாலையில் சுமார் 8 கிமீ தொலைவில் தொட்டபெட்டா சிகரம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான தொட்டபெட்டாவை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்வது வழக்கம். இங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரையும், அவலாஞ்சி, வேலிவியூ பள்ளத்தாக்கு, குன்னூர் மற்றும் இயற்கை காட்சிகளையும் பார்த்து ரசிப்பது வழக்கம்.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகை முழுமையாக பார்த்து ரசிக்க தொட்டபெட்டா சிகரம் சரியாக இடமாகும். இதனால் ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தவறாமல் தொட்டபெட்டா வந்து செல்கின்றனர். இச்சிகரத்திற்கு செல்ல கோத்தகிரி சாலையில் இருந்து 3 கிமீ தூரத்திற்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை வழியாக பயணிக்க வேண்டும்.
நுழைவாயில் பகுதியில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கான வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்ய பாஸ்ட் டேக் எனப்படும் மின்னணு பரிவர்த்தனை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஓராண்டாக இம்முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சீசன் சமயங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி செல்வதற்காக ஏராளமான வாகனங்கள் அணிவகுக்கின்றன.

இதனால் ஊட்டி – கோத்தகிரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் இச்சாலையில் பயணிக்கக்கூடிய பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதனை தொடர்ந்து தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கும் வேறு இடத்திற்கு மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்தது. நுழை வாயில் பகுதியில் இருந்து சிகரத்திற்கு செல்லக்கூடிய சாலையில் சுமார் அரை கிமீ தொலைவில் பாஸ்ட் டேக் நுழைவு கட்டண வசூல் மையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து கடந்த 16ம் தேதி பணிகள் துவங்கின. இதனால் 22ம் தேதி வரை 7 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே பாதி பணிகள் நிறைவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதை தவிர்க்கும் நோக்கில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனச்சரகர் சசிக்குமார் கூறுகையில், ‘‘ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை நுழைவு வாயில் பகுதியில் உள்ள பாஸ்ட் டேக் சோதனைச்சாவடியை போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டு மாற்றி அமைக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது.இதனிடையே சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதை தவிர்க்கும் வகையில் அவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று (23ம் தேதி) முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர்’’ என்றார்.

The post தொட்டபெட்டா சிகரத்திற்கு இன்று முதல் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Ooty ,Thottapetta ,Ooty – Kotagiri road ,Nilgiris district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருப்பத்தூர் அருகே பள்ளி வளாகத்தில்...