×

அத்தாணி வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற இடத்தில் யானை தாக்கி உயிரிழந்தவரின் உடல் மீட்பு

அந்தியூர் : அத்தாணி வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற இடத்தில் யானை தாக்கி பலியானவரின் உடல் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி பெஜிலட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் மாதன் (55). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள், மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 10 ஆண்டு காலமாக வனப்பகுதிக்குள் கூலிக்காகவும், சொந்தமாகவும் 40க்கும் மேற்பட்ட மாடுகளை பட்டி வைத்து மேய்த்து வருகிறார். கடந்த ஒன்றரை மாதங்களாக கொம்பு தூக்கி அம்மன் கோயில் பகுதியில் ஒரு தோட்டத்தில் மாடுகளை பட்டி போட்டு வைத்து வனப்பகுதிக்குள் பகல் நேரங்களில் மேய்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாதன் நேற்று முன்தினம் மாலை அத்தாணி வனப்பகுதி இரட்டைக்கரடு சரகம் பகுதியில் தனது தம்பி பெருமாளுடன் மாடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது அப்பகுதியில் யானை ஒன்று பிளிறி உள்ளது. இதனைக் கண்ட மாதன் தன் மாடுகளை போய் ஓட்டி வருவதாக தனது தம்பி பெருமாளிடம் கூறிவிட்டு, மாடுகளை ஓட்டி வரச்சென்றுள்ளார். அப்போது யானை பலமுறை பிளிறிய சத்தம் கேட்டு வனப்பகுதியை விட்டு சீக்கிரம் வந்து விடு எனக்கூறிவிட்டு பெருமாள் தப்பி ஓடி வந்துள்ளார்.

சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் மாடு மேய்த்தவர்கள் உதவியுடன் பெருமாள் சென்று மாதனை பார்க்கும்போது, முதுகில் யானை தாக்கியதில் இறந்து குப்புற கிடந்துள்ளார். இது குறித்து உடனடியாக நேற்று முன்தினம் மாலை அந்தியூர் வனத்துறையினருக்கும், பர்கூர் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் இரவு நேரம் ஆகிவிட்டதாலும் மாதனின் உடலை மீட்க முடியாமல் நேற்று காலை அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில், அந்தியூர் வனச்சரகர் முருகேசன் மற்றும் போலீசார் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

வனப்பகுதிக்குள் 1 கிமீ தூரம் வாகனத்தில் பயணித்து பின்பு அங்கிருந்து 2 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து சென்று மாதனின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்பு 2 கிமீ தூரத்திற்கு மாதனின் உடலை ஸ்ட்ரெக்சரில் வைத்து கயிறு கட்டி தூக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். இதையடுத்து அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாதனின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் வனப்பகுதிக்குள் சோகத்துடன் திரண்டு அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, வனத்துறையினர் அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவிக்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post அத்தாணி வனப்பகுதியில் மாடு மேய்க்க சென்ற இடத்தில் யானை தாக்கி உயிரிழந்தவரின் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Athani forest ,Antyur ,Attani forest ,MATHAN ,BEGILATI COLONY ,BURKUR MOUNTAINOUS AREA NEAR EROD DISTRICT, ANTYUR ,
× RELATED மாவட்டம் முழுவதும் புகையிலை...