×

ஆரல்வாய்மொழியில் மலை மேல் உள்ள முருகன் கோயிலில் சிக்கிய 40 பக்தர்கள்

*பலத்த மழையால் இறங்க முடியாமல் தவிப்பு

*தீயணைப்புத் துறையினர் மீட்டனர்

ஆரல்வாய்மொழி : ஆரல்வாய்மொழியில் கனமழையால் தென்பழனி சித்தகிரி பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள மலையில் சுமார் 2000 அடி உயரத்தில் தென்பழனி முருகன் கோயில் என அழைக்கப்படும் சித்தகிரி பால சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தைபூச திருவிழா, மலர் முழுக்கு விழா மற்றும் வைகாசி விசாகத்தினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

இக்கோயிலுக்கு விசேஷ நாட்களில் குமரி மாவட்டத்தில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாறையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய படி மற்றும் சிறிய மலை பாதை வழியாக செல்வார்கள். பக்தர்கள் அதிகாலையிலேயே மலையேறி கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் பூஜைகள் முடிந்ததும் மாலை வேளையில் கீழே இறங்கி வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று வைகாசி விசாக பூஜையினை முன்னிட்டு இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் அதிக அளவில் சென்றனர். இதனிடையே குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆரல்வாய்மொழியில் நேற்று காலையில் இருந்தே கனமழை பெய்ய தொடங்கியது. ஆனால் பக்தர்கள் மழையினையும் பொருட்படுத்தாமல் சித்தகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தனர். இக்கோயிலுக்கு பெரும்பாலும் சிறிய சிறிய பாறைகளில் ஏறி செல்ல வேண்டும்.

சில பகுதிகளில் மட்டும் பாறையில் படி அமைத்து உள்ளனர். காலையில் பெய்த கனமழை தொடர்ந்த காரணத்தினால் இக்கோயிலுக்கு செல்கின்ற மலை பாதையில் அதிக அளவில் தண்ணீர் பாய்ந்தது.இதனால் பாறை பகுதிகளில் வழுக்க தொடங்கியது. கோயிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள் மதியம் பூஜை முடிவதற்கு முன்பே கனமழையின் காரணமாக சுவாமியை தரிசனம் செய்துவிட்டு பூஜைக்கு முன்பாகவே கீழே இறங்க தொடங்கினர். அவர்கள் கனமழையால் மிகவும் சிரமப்பட்டு கீழே இறங்கினர்.

இதனிடையே சிறப்பு பூஜை முடிந்து பெண்கள் ,சிறுவர்கள்,முதியவர்கள் என சுமார் 40 பேர் தொடர்ந்து பெய்த மழையில் நனைந்து கொண்டு கீழே இறங்க முற்பட்டனர். ஆனால் அவர்களால் பாறை பகுதிகளில் தண்ணீர் அதிகமாக இருந்த காரணத்தினால் கீழே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த அவர்கள் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த தீயணைப்பு துறையில் வேலை பார்க்கும் பக்தர் ஒருவர் இச்சம்பவத்தினை பார்த்ததும் பக்தர்களுக்கு உதவ முற்பட்டார். ஆனால் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தினால் தனியாக இருந்து அனைவரையும் கீழே இறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

உடனே இது பற்றி நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்தியகுமார் உத்தரவின்படி மாவட்ட உதவி தீயணைப்பு துறை அலுவலர் துரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீழே இறங்க முடியாமல் பரிதவித்த அனைத்து பக்தர்களையும் பத்திரமாக கயிறு கட்டி கீழே இறக்கினர்.

கீழே இறங்க முடியாமல் பரிதவித்த பத்தர்களின் உறவினர்கள் மலையடிவாத்தில் குவிய தொடங்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்ததும் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.அவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post ஆரல்வாய்மொழியில் மலை மேல் உள்ள முருகன் கோயிலில் சிக்கிய 40 பக்தர்கள் appeared first on Dinakaran.

Tags : Murugan Temple ,Aral ,Araloral ,Sidthagiri ,Balasubramaniya ,Swami Temple ,Tenbhani ,Kumari District ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பகுதிகளில் குழந்தைகளை...