×

பூப்பாண்டியாபுரம், புதிய முனியசாமிபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம்

*விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

தூத்துக்குடி : பூப்பாண்டியபுரம் மற்றும் புதிய முனியசாமிபுரத்தில் பல மாதங்களாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பல இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மழைநீரை அகற்றும் பணியில் அப்போது அதிகாரிகள் துரிதமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் பூப்பாண்டியாபுரம், புதிய முனியசாமிபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான இடங்களில் பல மாதங்களாக மழைநீர் தேங்கிய நிலையில் கிடக்கிறது. தற்போது கோடை மழை பெய்து வருவதால் இப்பகுதியில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பூப்பாண்டியாபுரம், புதிய முனியசாமிபுரம் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகளும் முறையாக அகற்றப்படாமல் தண்ணீரில் மிதந்த நிலையில் உள்ளது. தண்ணீர் பல மாதங்களாக தேங்கி இருப்பதால் பச்சை நிறமாக மாறி கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தி செய்யும் மையமாக மாறியுள்ளது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

எனவே பல மாதங்களாக தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதிகளில் குறைந்த மின் அழுத்த பிரச்னை இருப்பதால் மின் சாதனங்கள் பழுதாவதாகவும், இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை எனவும் குற்றம்சாட்டுகினறனர்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனபால் கூறியதாவது: இப்பகுதியில் பல மாதங்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதோடு, கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. தண்ணீர் பச்சை கலராக மாறி காட்சியளிக்கிறது. சுகாதாரத்துறையும் இதை கண்டு கொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், குப்பைகளை அப்புறப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

The post பூப்பாண்டியாபுரம், புதிய முனியசாமிபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Boopandiyapuram ,New Muniyasamipuram ,Thoothukudi ,Bhupandiapuram ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி