×

கோபி அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு கிடாய் வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு

*பக்தர்கள் அதிர்ச்சி

கோபி : கோபி அருகே கோயில் திருவிழாவில் ஆட்டுக்கிடாய் வெட்டி பச்சை ரத்தம் குடித்த பூசாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழா கடந்த 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதுமே கோயில் பூசாரிகள் 16 பேரும் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.

இந்த பரண் கிடாய் பூஜையின்போது, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண் போன்ற அமைப்பின் மீது வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் கொடுக்கும் ஆட்டுக்கிடாய்களை பரண் கிடாய் பூசாரிகள் வெட்டி, அவற்றின் பச்சை ரத்தத்தில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடுவதும், அதை குழந்தை இல்லாதவர்கள், தொழில் தடை, உடல்நிலை சரியாக வேண்டும் என வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் ஆகியோருக்கு பரண் கிடாய் பூசாரிகள் வழங்குவது வழக்கம்.

அதுபோன்ற பரண் கிடாய் பூஜையில் கோபி அருகே உள்ள நல்லகவுண்டன் பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிச்சாமி (45) என்பவர் கலந்து கொண்டார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய பரண் கிடாய் பூஜையில் 20க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும், வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பழனிச்சாமி உயிரிழந்தார். கோயில் திருவிழாவில் உயிரிழந்த பழனிச்சாமி வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவியும், பிரபுகுமார், தினேஷ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

உயிரிழந்த பழனிச்சாமிக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்றதாகவும், அதைத்தொடர்ந்து ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாகவும், நேற்று திருவிழாவின்போது மாத்திரை சாப்பிடாமல் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். உடல் நிலை சரியில்லாத நிலையில் பச்சை ரத்தம் குடித்ததாலும், மாத்திரை சாப்பிடாமல் இருந்ததாலும் கோயில் பூசாரி உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோபி அருகே கோயில் திருவிழாவில் பரபரப்பு கிடாய் வெட்டி ரத்தம் குடித்த பூசாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kitai ,Gobi ,Gopi ,Annamar ,Kolappalur Chettiampalayam ,Gobi, Erode district ,
× RELATED கிடாய் வெட்டி ரத்தம் குடித்த பூசாரி சாவு