×

9வயது சிறுமி கொலை வழக்கு புதுவை சிறையில் 2 குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

*ஜூன் முதல் வாரத்தில் விசாரணை துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி கொலை வழக்கில், சிறையில் உள்ள 2 குற்றவாளிகளிடம் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. ஜூன் முதல் வாரத்தில் வழக்கு விசாரணை மீண்டும் துவங்கவுள்ள நிலையில் இவ்வழக்கில் விரைவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி மார்ச் 2ம்தேதி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) இருவரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தடயவியல் நிபுணர்கள் சம்பவம் நடந்த இடத்தில் சேகரித்த தடயங்கள், குற்றவாளிகளின் கைரேகை மற்றும் ரத்த பரிசோதனை அறிக்கை, தடயவியல் அறிவியல் ஆய்வு பரிசோதனை, டிஎன்ஏ மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. போக்சோ வழக்கு என்பதால் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனிடையே முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கு குற்றப் பத்திரிக்கை கடந்த 3ம்தேதி புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 83 சாட்சிகள் வாக்குமூலத்துடன், ஆவணங்களுடன் 600 பக்க குற்றபத்திரிகையை விசாரணை குழு எஸ்பி கலைவாணன் தலைமையில் விசாரணை அதிகாரியான கிழக்கு எஸ்பி லட்சுமி சௌதன்யா (சட்டம்- ஒழுங்கு), இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நீதிபதி சோபனா தேவியிடம் தாக்கல் செய்தனர்.

பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு விசாரணை துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவ்வழக்கின் குற்றவாளிகளான விவேகானந்தன் மற்றும் கருணாஸ் இருவரிடமும் குற்றப் பத்திரிகை நகலை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று முன்தினம் வழங்கினர்.

இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை வருகிற 5 அல்லது 6 தேதிகளில் புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வரவுள்ளது. அன்றைய தினம் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அரசு தரப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகி இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர தயாராகி வருவதால் இவ்வழக்கு விசாரணை அடுத்தடுத்து சூடுபிடித்து, விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 9வயது சிறுமி கொலை வழக்கு புதுவை சிறையில் 2 குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Puduvai Jail ,Puducherry ,Puduwai Jail ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!