×

ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்

பாபாவின் மீதான தாஸ்கணுவின் பக்தி 1893இல் தொடங்கியது. 1903 ஆம் ஆண்டு அவர் தன் காவல்துறை பணியிலிருந்து விடுபட்ட பொழுது அது இன்னும் உறுதியானது. இடைப்பட்ட பத்து வருடங்களில், தாஸ்கணு என்று அழைக்கப்படும் கணேஷ் தத்தாத்ரேய ஸஹஸ்ரபபுத்தே பாபாவை தரிசனம் செய்தது சில தடவைகள் மட்டுமே. பாபா தாஸ்கணுவின் நிலையில் பல மாற்றங்களைச் செய்தார். 1903க்குப்பின் தாஸ்கணு பாபாவின் புகழை ஹரி கதைகள் மூலமாக மகாராஷ்டிரம் முழுவதும் பரப்பினார்.

அவர் மகாராஷ்டிர மொழியில் பாபாவைப் பற்றி ஸ்ரீசாயிநாத ஸ்தவன மஞ்ஜரி என்னும் ஸ்தோத்திரப் பாடலை எழுதினார். இதனை 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று நிறைவு செய்தார். அப்பாடலை பாபாவிடம் கொடுத்து ஆசீர்வதிக்கும்படி தாஸ்கணு கேட்டார். பாபா அந்த மஞ்ஜரியை தன் தலைமேல் வைத்து ஆசீர்வாதம் செய்தார். இந்தத் துதியைத் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் நம்முடைய அனைத்து துயர்களும் விலகும் என்பது பாபா பக்தர்களின் நம்பிக்கை.

ஒருமுறை ஈசாவாஸ்ய உபநிஷதத்திற்கு மராத்திய விளக்க உரை எழுத ஆரம்பித்தார் தாஸ்கணு. மராத்திய ஓவி என்பது யாப்பு வகையிலான செய்யுள் வடிவில், செய்யுள் செய்யுளாக மொழிபெயர்க்க முற்பட்டபோது ஈசாவாஸ்யத்தின் முழுமையான பொருளை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை. பல அறிஞர்களுடன் இதைப்பற்றிய விவரங்களை விரிவாக விவாதித்தும் கூட தாஸ்கணு திருப்தியடையவில்லை. ஆத்ம அனுபூதி பெற்ற ஒருவரே இதற்குச் சரியான விளக்கம் அளிக்க முடியும் என நினைத்தார்.

இது சம்பந்தமாக பாபாவின் ஆலோசனையைப் பெற சீரடிக்குச் சென்றார். அங்கு பாபாவிடம் தன் எண்ணங்களைச் சொல்லி அதற்குச் சரியான தீர்வு தரும்படி வேண்டினார். ‘‘கவலைப்படாதே நீ வீட்டிற்குப் போகும் வழியில் விலேபார்லேயில் காகாவின் வேலைக்காரி உனது சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்’’ என்று பாபா கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் வேலைக்காரி ஒருத்தி இந்தச் சிக்கலை எவ்வாறு தீர்த்து வைக்கமுடியும் என்றும் வேடிக்கையாக பாபா பேசுகிறார் என்றும் நினைத்தனர். ஆனால் தாஸ்கணு இவ்விஷயத்தில் பாபாவின் வார்த்தையே நமக்கு ஆண்டவனின் ஆணையாகும் என்பதில் உறுதியாக இருந்தார்.

வேத சாஸ்திரங்களில் வல்லவரான பிரம்மரதனுக்கும் அவர் மனைவி சுனந்தாவிற்கும் நெடுநாட்களாக குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. பிரம்மரதன் விஷ்ணுவை நோக்கித் தவம் செய்தார். அதன் பயனாக விஷ்ணுவின் அருளால், விஷ்ணுவின் அம்சமாக, ஐந்து வருட கர்ப்ப வாசத்திற்குப் பிறகு, கார்த்திகை மாதம் சுக்லபட்சம் துவாதசி திதியில் தனுசுலக்னம் சதய நட்சத்திரத்தில் யாக்ஞவல்கியர் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ஸானந்தர். வேத கலைகளில் சிறந்து விளங்கிய ஸானந்தரை மகிரிஷிகள் யாக்ஞவல்கியர் என்று மகிழ்ந்து அழைத்தனர். யாக்ஞவல்கியர் என்ற சொல்லுக்கு ‘‘யாகத்திற்காக உடுத்தும் மரவுரியை உடுப்பவர்’’ என்பது பொருள்.

வேத குருவான பிரகஸ்பதி யாக்ஞவல்கியருக்கு சகல கலைகளையும் சாஸ்திரங் களையும் கற்றுக் கொடுத்து உபநயனமும் செய்து வைத்தார். விருத்த வியாசரிடமும், தன் தாய்மாமாவான வைசம்பாயனரிடமும் ரிக், யஜுர் வேதங்களைக் கற்றார். வியாசரின் சீடராகி யஜுர் வேதங்களைக் கற்ற வைசம்பாயனரை வேத விற்பன்னர்கள் சகல்யர் என்று அழைத்தனர். இந்த வைசம்பாயனர் தான் அர்ஜுனனின் கொள்ளுப் பேரனான ஜனமேஜயனுக்கு (அர்ஜுனன்-அபிமன்யு-பரீக்ஷித்-ஜனமேஜயன்) மஹாபாரதத்தை கதை வடிவில் எடுத்துக் கூறியவர். இதற்குச் சான்றாக ஸ்ரீவைசம்பாயன உவாச என்ற பகுதி, விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரம் பூர்வபாகத்தில் இன்றும் பாராயணம் செய்யப்படுகிறது.

காத்யான மகிரிஷியின் புதல்வியான காத்யாயினியையும் மித்ர மகிரிஷியின் மகளான மைத்ரேயியையும் யாக்ஞவல்கியர் மணந்துகொண்டார். இருமனைவியருள் மைத்ரேயி ஒரு பெண் தத்துவஞானியாக விளங்கியவர். யாக்ஞவல்கியர் துறவறம் மேற்கொண்ட போது உங்கள் சொத்து எதுவும் தேவையில்லை பிரம்ம ஞானமே நீங்கள் எனக்குத் தருகிற சொத்து என்று கூறியவர்.
மிதிலாபுரியில் வைசம்பாயனர் சீடர்களுடன் இருந்தபொழுது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சீடன் ஜனக மஹாராஜாவிற்கு குருவிடமிருந்து மந்திர அட்சதை கொண்டு போய் கொடுத்து வர வேண்டும் என்று ஏற்பாடாகியிருந்தது. யாக்ஞவல்கியர் சென்ற நாளன்று ஜனகர் சபையில் இல்லை.

அதனால் அட்சதையை சிம்மாசனத்தின் மேல் வைத்துவிட்டு வந்தார். ஜனகர் வந்து பார்த்த பொழுது அட்சதை முளைத்து சிம்மாசனத்தின் மேல் கொடி போல் வளர்ந்து படர்ந்திருந்தது. அதைக் கண்டு வியந்த ஜனகர், அன்று அட்சதை கொண்டு வந்த சீடரை அழைத்து வரும்படிக் கூறினார். பாடம் கற்கும் சமயத்தில் அரசர் அழைத்ததை மதிக்காமல் யாக்ஞவல்கியர் போக மறுத்துவிட்டார்.

இக்காரணத்திற்காகவும், வேறு சீடர்களை யாக்ஞவல்கியர் மதிக்காமல் இருந்ததாலும், அவர் தமக்கு சிஷ்யர் அல்லர் என்று நினைத்து, என்னிடம் கற்ற வேதத்தைக் கக்கிவிடு என்றார் வைசம்பாயனர். (ஆனால் வைசம்பாயனர் யாக்ஞவல்கியர் மூலமாக சுக்ல யஜுர் வேதம் உலகத்திற்கு வெளிப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பொய்க் கோபத்துடன் இப்படிக் கூறினார் என்பர்). யாக்ஞவல்கியர் தாம் கற்றதை அப்படியே திரும்பக் கூற அவர் திருவாயிலிருந்து வேதங்கள் நெருப்புப் பிழம்பாய் வெளி வந்தன. உடனே மற்ற சீடர்கள் நெருப்பு உண்ணும் தித்திரிப்புறா வடிவம் கொண்டு அதை உண்டனர். பின் சீடர்கள் வெளிப்படுத்திய பகுதிதான் தைத்திரீய சாகை என்றழைக்கப் படுகிறது.

அதன் பிறகு யாக்ஞவல்கியர் சூரிய பகவானிடம் யஜுர் வேதத்தின் மீதமுள்ள பகுதிகளை கற்றுக் கொள்வதற்காக காயத்ரி தேவியை உபாசனை செய்து தவமிருந்தார். காயத்ரி தேவி சூரியனிடம் பரிந்துரை செய்ய, யாக்ஞவல்கியரை சீடராக ஏற்றுக் கொண்டு தன்னைத் தவிர யாருமே அறியாத யஜுர் வேதத்தின் சில பகுதிகளை சூரியன் கற்றுக் கொடுத்தார். அந்த யஜுர் வேதம்தான் சுக்ல யஜுர் வேதம் என்று அழைக்கப்படுகிறது. வாஜி (குதிரை) ரூபத்தில் சூரிய பகவான் உபதேசித்ததால், யாக்ஞவல்கியருக்கு வாஜஸநேயர் என்ற பெயர் ஏற்பட்டு, இப்பகுதியும் வாஜஸநேய ஸம்ஹிதை என்று அறியப்படுகிறது.

இதனைக் கண்வர், மத்யாந்தினர் முதலிய பதினைந்து சீடர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு சீடர் மூலம் ஒவ்வொரு சாகை உண்டானது, ஆனால், தற்போது காண்வ சாகை மற்றும் மாத்யந்தின சாகை ஆகிய இரண்டு மட்டுமே காணப்படுகின்றன.ஜனகரின் சபையில் மற்ற தத்துவ ஞானிகளின் கேள்விகளுக்கு விடைகள் அளித்து பிரம்மஞானி என்ற பட்டம் பெற்றவர் யாக்ஞவல்கியர். ஜனகர் பிரம்மஞானியைப் பார்த்து விட்ட மகிழ்ச்சியில் இருந்தார். ‘‘உபநிஷதக் கடலின் கலங்கரை விளக்கமான யாக்ஞவல்கியரை ஆதர்ச குருவின் தாய்மையானவர்’’ என்று போற்றுகிறார் தத்துவ ஆராய்ச்சியாளரான டாக்டர் வில்லியம் சென்கினர்.

யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேதம், சுக்ல யஜுர் வேதம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கிருஷ்ண யஜூர் வேதத்தின் மையப்பகுதிதான் புகழ்பெற்ற ஸ்ரீருத்ரம். இது நமகம் எனப்படும், சமகம் என்ற மற்றொரு பகுதியும் சேர்த்து ஓதப்படும். சுக்ல யஜூர் வேதத்தில் வாஜஸநேய ஸம்ஹிதையில் 40 அத்தியாயங்கள் உள்ளன. 39 அத்தியாயங்கள் கர்ம காண்டத்தையும் 40 ஆவது அத்தியாயம் ஞான காண்டத்தையும் குறிக்கின்றன. 40 ஆவது அத்தியாயமான ஞானகாண்டப் பகுதிதான் ஈசாவாஸ்ய உபநிஷதம். இது 18 மந்திரங்களே உடைய சிறிய உபநிஷதம். ‘‘மனிதனை விழித்தெழச் செய்ய இந்தியா எழுப்பிய குரல்களில் ஒன்று ஈசாவாஸ்யம்” என்று விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.

‘‘ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்’’ என்ற மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது. அந்த முதல் மந்திரத்தின் பொருள் இதுதான், ‘‘இயங்கும் தன்மையான இந்த உலகத்தில் உள்ளதெல்லாம் ஈசுவரனால் பரவியிருக்கிறது. அதனால் பற்றற்ற தியாகத்தால் அனுபவி. எவருடைய பொருளுக்கும் ஆசைப்படாதே’’. ஈசுவரனின் சர்வ வியாபகத் தன்மையை புரிந்துகொண்டு அதை அனுபவிக்கும் முயற்சியே ஆன்மாவின் முயற்சியாகும். அதுவே ஒளி நிலைக்கு இட்டுச் செல்லும்.

‘‘எல்லா உபநிஷதங்களும் பிற வேதங்களும் திடீரென்று தீப்பற்றி எரிந்து சாம்பலாகி விட்டாலும், ஈசாவின் இந்த முதல் மந்திரம் மட்டுமே ஹிந்துக்களின் மனதில் எஞ்சியிருக்குமானால் ஹிந்து மதம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற தீர்மானத்தை நான் எட்டியிருக்கிறேன்’’ என்பது ஈசாவாஸ்யத்தைப் பற்றிய தேசப்பிதா காந்தியடிகளின் கூற்று.‘‘ஈசாவாஸ்யத்தை வியாக்யானம் செய்ய முனைந்தபோது கடவுள் சிரித்து விட்டார்’’ என்று மகான் அரவிந்தர் சொல்கிறார்.

என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட உபநிடதம் ஈசாவாஸ்ய உபநிடதம் என்று இராஜாராம் மோகன்ராய் ஈசாவை வாழ்க்கையின் உன்னதமாகக் கண்டார்.இவ்வாறு ஈசாவாஸ்யத்தை தத்துவ ஞானிகள் தலைவெடிக்க சிந்தித்திருக்கிறார்கள். ஆனால், நாம் பாபாவின் அருளால் தாஸ்கணுவின் வழியாக ஈசாவாஸ்யத்தின் முதன்மையான அம்சத்தைத் தெரிந்து கொள்ளப்போகிறோம்.
தாஸ்கணு பாபாவின் மொழிகளில் முழுமையான நம்பிக்கை கொண்டு சீரடியை விட்டு விலேபார்லேவிற்கு வந்து காகா ஸாஹேப் தீக்ஷித்துடன் தங்கினார். அடுத்த நாள் காலை தாஸ்கணு ஒரு சிறு தூக்கத்தில் இருந்தபோது, ஓர் ஏழைச் சிறுமி ‘கருஞ்சிவப்புக் கலர் புடவை நன்றாய் இருக்கிறது. அதில் பூ வேலைகளும் பார்டரும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன’ என்று மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருந்தாள். தாஸ்கணு வெளியே வந்து பார்த்தபோது காகாவின் வேலைக்காரர் ஆன நாம்யாவின் சகோதரிதான் அந்தச் சிறுமி என்று கண்டு கொண்டார்.

அப்பொழுது அவள் ஒரு கிழிந்த கந்தலான ஆடையை அணிந்து கொண்டிருந்தாள். அடுத்த நாள் பிரதான் என்பவர் ஒருவருக்கு ஒரு ஜோடி வேஷ்டி கொடுத்தபோது அச்சிறுமிக்கும் புடவை வாங்கிக் கொடுக்குமாறு தாஸ்கணு கேட்டுக் கொண்டார். பிரதானும் அச்சிறுமிக்கு ஒரு சிறிய புடவை வாங்கி வந்து கொடுத்தார். மறுநாள் அந்தப் புதிய புடவையை அணிந்து கொண்டு மகிழ்ச்சியோடு விளையாடினாள்.

அதற்கடுத்த நாள் புதிய புடவையை வீட்டில் வைத்துவிட்டு பழைய கந்தல் ஆடையை அவள் அணிந்து வந்தாள். இருந்த போதிலும் அப்பொழுதும் அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். பழைய கந்தையை உடுத்தி இருந்த போதும், புதிய புடவையை உடுத்தி இருந்த போதும் ஒரே விதமான மகிழ்ச்சியில் இருந்த சிறுமியைப் பார்த்த தாஸ்கணு, மனதைப் பொறுத்துத் தான் இன்பம், துன்பம் என்பதை உணர்ந்தார்.

அவள், அவளது கந்தல் ஆடை, புதுப்புடவை, அதை அளித்தவர், அதைக் கொடுக்கச் செய்தவர் எல்லாம் கடவுளின் கூறுகள். அவரே எல்லாவற்றிலும் ஊடுருவிப் பரந்து இருக்கிறார் என்ற நடைமுறைப் பாடத்தையும் கற்றார் தாஸ்கணு. எப்பொழுது எல்லாப் பொருட்களும் ஆன்மாகவே ஆகிவிடுகின்றனவோ, அப்போது அங்ஙனம் ஒற்றுமையைக் கண்ட அவனுக்கு மயக்கம் ஏது? துன்பம் ஏது? எல்லாம் தானாகக் (தன் ஆன்மாவாக) காணும் காட்சி. இது ‘பிரிப்பின்றித் தானே உலகாம், தமியேன் உளம்புகுதல் யானே உலகென்பன் இன்று’ (உலகுஆம், தானேஆம், உலகே தானேஆம் – யானே உலகம்) என்று மெய்கண்ட தேவரும், ‘யானே உலகம் ஆயினேன்’ என்று வாமதேவ முனிவரும் காட்டும் சித்தாந்த உண்மைகள்.

எவ்வளவு எளிதாக ஈசாவாஸ்யத்தை தாஸ்கணு புரிந்துகொண்டார். இதுதான் பாபாவின் தன் நிகரில்லாத போதனை முறை. சிலரைக் கடவுள் பெயரை உச்சரிக்கும் படியும், சிலரைக் கடவுளின் லீலைகளை கேட்கும்படியும், சிலரைப் புண்ணிய நூல்கள் படிக்கும்படியும், சிலருக்கு கனவுகள் மூலமாகவும் மற்றும் சிலருக்கு அவர்கள் வழிபடும் தெய்வம் மூலமாகவும் பாபா உபதேசம் செய்வர். அவர் பக்தர்களுக்கு உபதேசிக்கக் கையாண்ட எல்லா வழிகளையும் செயல் முறைகளையும் விவரிப்பது என்பது இயலாது.

ஏனெனில் யார்க்கும் முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் appeared first on Dinakaran.

Tags : Isavasya ,Daskanu ,Baba ,Ganesh Dattatreya Sahasrapabudhe ,Baba… ,Easavasyam ,Itham Sarvam ,
× RELATED ஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்