×

நிதிப் பற்றாக்குறையை போக்க ஒன்றிய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி அள்ளிக் கொடுத்த ரிசர்வ் வங்கி

மும்பை: ஒன்றிய அரசுக்கு நடப்பு நிதியாண்டுக்கான டிவிடெண்டாக இதுவரை இல்லாத அளவாக ரூ.2.11 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவின் 608வது கூட்டம், அதன் கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் மும்பையில் நடந்தது. அப்போது ரிசர்வ் வங்கியின் உபரிவருவாயை ஒன்றிய அரசுக்கு டிவிடென்டாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், 2023-24 நிதியாண்டுக்காக ஒன்றிய அரசுக்கு ரூ.2,10,874 கோடிவழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு, இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி வந்த டிவிடென்டில் இதுவே உச்சபட்ச தொகையாக உள்ளது. ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை இலக்கான 5.1 சதவீதத்தை எட்டுவதற்கு ரிசர்வ வங்கி வழங்க உள்ள மேற்கண்ட டிவிடென்ட் தொகை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு உபரி நிதி ரூ.52,637 உட்பட ரூ.1,76,051 கோடியை ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது. ரிசர்வ் வங்கி ஒவ்வோர் ஆண்டும் ஒன்றிய அரசுக்கு டிவிடென்ட் தொகை வழங்குவது வழக்கம் தான். ஆனால், கடந்த 2014ம் ஆண்டு பாஜ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து டிவிடென்ட் பெறுவதில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன. பிமல் ஜலான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபோது, நிதிப் பற்றாக்குறையை போக்க ரிசர்வ் வங்கியின் தன்னிடம் உள்ள உபரி நிதியையும் டிவிடென்டுடன் சேர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய பாஜ அரசு நிர்பந்தம் செய்ய தொடங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஒன்றிய அரசு தனக்கு ஆதரவானவர்களை நியமனம் செய்து, ரிசர்வ் வங்கியை நிர்ப்பந்தித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்நிலையில், 2019 ஆகஸ்ட்டில் பிமல் ஜலான் தலைமையிலான பொருளாதார நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கைப்படி, ரிசர்வ் வங்கியின் இடர்பாட்டு நிதியை 5.5 சதவீதமாக பராமரித்து வருவது என முடிவு செய்யப்பட்டு, 2020-21ல் ரூ.99,122 கோடியை டெவிடென்டாக வழங்க, கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வளவு பெரிய தொகை, அந்த நிதியாண்டில் மார்ச் 2021 உடன் முடிவடைந்த 9 மாதங்களுக்கான டிவிடென்டாக கணக்கிட்டு வழங்கப்பட்டதாகும். இடர்பாட்டு நிதி 5.5 சதவீதம் என பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பொருளாதார வளர்ச்சி, சர்வதேச அளவிலான ஸ்திரமன்ற தன்மையால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றுக்கு ஏற்ப இடர்பாட்டு நிதியை 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதமாக பேணுவது என ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இருப்பினும், இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில் ரூ.2.11 லட்சம் கோடியை ஒன்றியஅரசுக்கு டிவிடென்டாக ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post நிதிப் பற்றாக்குறையை போக்க ஒன்றிய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி அள்ளிக் கொடுத்த ரிசர்வ் வங்கி appeared first on Dinakaran.

Tags : Reserve Bank ,Union Government ,Mumbai ,Board of ,Directors ,Governor ,Shakti ,Dinakaran ,
× RELATED குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி...