×

நான் மனிதப்பிறவியே இல்லை: கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பினார்; மோடி பரபரப்பு பேச்சு

புவனேஸ்வர்: ‘ என்னை பூமிக்கு கடவுள் நேரடியாக அனுப்பி வைத்து இருக்கிறார். நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை’ என்று பிரதமர் மோடி கூறியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பூரி தொகுதி பாஜ வேட்பாளர் சம்பித் பத்ரா பேசுகையில், ‘பூரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் பக்தர்’ என்று தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பித் பத்ரா, மோடி ஜெகந்நாதரின் பக்தர் எனக் கூறுவதற்கு பதிலாக, வாய் தவறி கூறிவிட்டதாக மன்னிப்பு கோரியதுடன், 3 நாள்கள் விரதம் இருக்க போவதாக அறிவித்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி தான் மனிதப் பிறவி இல்லை என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறும்போது, ‘என் அம்மா இருந்தவரை நான் எல்லாரையும் போல உடல் ரீதியில்தான் பிறந்ததாக நம்பிக் கொண்டிருந்தேன். அம்மா இறந்ததற்கு பின்னால் என் வாழ்வின் அனுபவங்களை எல்லாம் சேர்த்துப் பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகியது. என்னை இந்த பூமிக்கு இறைவன் நேரடியாக அனுப்பி இருக்கிறான். இந்த பூமியில் என்னை வைத்து இறைவன் சில காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டி இருந்திருக்கிறது. எனவே நேரடியாக அனுப்பி வைத்திருக்கிறான். எனவே நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன். மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை. என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான்.

ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல், சாதாரண மனிதர் பெற்றது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும். இந்த பதவி, புகழ் எல்லாம் அவர் கொடுத்தது தான். அதனால்தான் நான் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலை பெற்றுள்ளேன் என்ற நம்புகிறேன். நான் சொல்வதற்கு பல்வேறு விமர்சனங்கள் வரலாம். ஆனால் நான் உணர்ந்தவற்றை மட்டும் சொல்கிறேன். நான் கடவுளின் கருவி. அவர் என்னவெல்லாம் செய்ய நினைக்கிறாரோ அதை என் மூலம் செய்கிறார். நான் கடவுளை இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. பிறரைப்போல் நானும் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபட்டு வருகிறேன்’ என்றார்.

The post நான் மனிதப்பிறவியே இல்லை: கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பினார்; மோடி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : God ,earth ,Modi ,Bhuvaneshwar ,Sambit Bhadra ,BJP ,Puri ,Odisha ,Puri Jagannath ,
× RELATED இறைத்தேடலில் நிதானமே பிரதானம்!!