×

காசாவில் ஓயாத போருக்கு மத்தியில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து: தூதர்களை வாபஸ் பெற்றது இஸ்ரேல்

டெல் அவிவ்: இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா பகுதிகளை உள்ளடக்கிய பாலஸ்தீனம் தனி நாடாக விடுதலை பெற்றதாக கடந்த 1988ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நாட்டை, அரபு நாடுகள் உடனடியாக அங்கீகரித்தன. பல்வேறு காலகட்டங்களில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன அரசை ஏற்றுக் கொண்டன. ஐநா உறுப்பு நாடுகளான 193 நாடுகளில் 140 நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகிய 3 நாடுகளும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக நேற்று அறிவித்தன.

வரும் 28ம் தேதி முறைப்படியான அங்கீகாரம் வழங்கப் போவதாக அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், நார்வே பிரதமர் ஜோனஸ் கார், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் அறிவிப்பை வெளியிட்டனர். முதல் முறையாக ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க முடிவாக கருதப்படுகிறது. மத்திய கிழக்கில் அமைதியை மீட்கவும், காசா போரை முடிவுக்கு கொண்டு வரவும் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக 3 நாடுகளும் தெரிவித்துள்ளன. சமீபத்தில் ஐநாவில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக நியமிக்க கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்த முடிவு தீவிரவாதத்திற்கு தரப்பட்ட பரிசு என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், 3 நாடுகளில் இருந்தும் தனது தூதரை உடனடியாக திரும்பப் பெற்றது.

The post காசாவில் ஓயாத போருக்கு மத்தியில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து: தூதர்களை வாபஸ் பெற்றது இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : Norway, Spain, Ireland ,Gaza ,Israel ,Tel Aviv ,Palestine ,West Bank ,Norway, ,Spain, ,Ireland ,Dinakaran ,
× RELATED பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த...