×

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாகப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தனியார் வாகனங்களில் போலீஸ், மீடியா, தலைமைச்செயலகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்தது. இந்த அறிவிப்பிலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீநிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, அவசர பணிக்காக செல்லும் மருத்துவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்களிக்கலாம்.

வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல, மருத்துவர்களுக்கும் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திடம் கருத்து கேட்கலாம் என்று கூறினார். இதற்கு பதில் அளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், மருத்துவ ஆணையத்தையும் வழக்கில் இணைக்கலாம் என்றார். இதையடுத்து, தேசிய மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் இணைக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும், மருத்துவ கவுன்சிலின் வாதத்தை கேட்ட பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். அதேநேரத்தில் மருத்துவர்கள் ஸ்டிக்கரை தவறாகப் பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி கூறினார்.

The post வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட டாக்டர்களுக்கு விலக்கு; விதி மீறினால் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Dinakaran ,
× RELATED 1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை...