×

வல்லமை தருவான் வடபழனி முருகன்

சென்னை வடபழனியில் அருட்பாலிக்கும் முருகப்பெருமான் பாத ரட்சையுடன் (காலணிகள்) வீற்றிருப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு. சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பது மிகவும் சிறப்பு.சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு அண்ணாசாமி தம்பிரான் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் முருகன் மீது அபார பக்தி கொண்டவர். மிதமிஞ்சிய தனது பக்தியின் காரணமாக தன் நாக்கையே அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர். (நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்). இவர், தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை வைத்து பூஜை செய்து வந்தார்.

தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்களது குறையைப் போக்கும் பொருட்டு, துன்பத்திற்கான காரணங்களை முருகன் அருளால் குறி சொல்லி வந்தார். இவர் பூஜித்து வந்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சந்நதியின் உட்பிராகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருக்கிறது. ரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கற்கள் கொண்டு கட்டிடம் கட்டப்பட்டது.

குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான். பாக்யலிங்க தம்பிரான், இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிராகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் இவர். இவரும் வடபழநி கோயிலுக்கு பாவாடம் தரித்தவர். இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்கத் தொடங்கியது.

இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 1 பர்லாங்கு தொலைவில் இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது. இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் தனியே திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபட ஏதுவாக தினசரி பூஜைகளும் நடைபெறுகின்றன.காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

தொகுப்பு: ராதாகிருஷ்ணன்

The post வல்லமை தருவான் வடபழனி முருகன் appeared first on Dinakaran.

Tags : Vadapalani ,Murugan ,Chennai ,Lord ,Muruga ,Swami ,Annasamy Thambiran ,
× RELATED கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!