தேனி : தேனி அருகே வீரபாண்டி முல்லையாற்றில் நீர்வரத்து குறைந்த போதும் பொதுமக்கள், பயணிகள் குளிப்பதற்கு குவிந்து வருகின்றனர்.தேனி அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலை ஒட்டி முல்லையாறு செல்கிறது. இங்கு தடுப்பணை இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பயணிகள் ஆற்றில் குளித்துச் செல்ல விரும்புவார்கள்.
தற்போது கோடை விடுமுறை என்பதாலும் தண்ணீர் வரத்து இருப்பதாலும் ஏராளமானோர் இங்கு வந்து குளித்துச் செல்கின்றனர். கடந்த மே 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் களைகட்டியது. திருவிழாவுக்கு வந்தவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் குறைந்த தண்ணீரிலும் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து கோடை மழை தொடங்கியதால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் முல்லையாற்றில் குளிக்க வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நீர்வரத்து குறைந்துள்ளது. இருந்த போதும் இங்கு குளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள், குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.
சித்திரை திருவிழா காலத்தில் வர முடியாத பக்தர்கள் பலரும் தற்போது கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அவர்களும் முல்லையாற்றில் உற்சாகமாக குளித்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர். மேலும் தேனி பகுதியை கடந்து செல்லும் பயணிகளும் வீரபாண்டி வழியாக வந்து வாகனங்களை நிறுத்தி குளித்துச் செல்கின்றனர். இதனால் முல்லையாறு தடுப்பணை பகுதியில் கூட்டம் காணப்படுகிறது. நேற்று வார நாளாக இருந்த போதும் ஏராளமானோர் குளிப்பதற்காக வந்திருந்தனர்.
The post நீர்வரத்து குறைந்தபோதும் வீரபாண்டி முல்லையாற்றில் குவியும் பயணிகள் appeared first on Dinakaran.