×

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மே 17ம் தேதி கோடை விழா மற்றும் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 10 உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை 360 டிகிரியில் சுழன்று வீடியோ எடுக்க புதிய கருவி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 தினங்களில் 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் பிரயண்ட் பூங்காவிற்கு வந்து சென்றுள்ளனர்.

இதன்மூலம் நுழைவு கட்டணமாக ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மழை நின்ற பின்னர் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கண்காட்சியை மேலும் சில தினங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பூங்காவிற்கு செல்லக்கூடிய நுழைவு கட்டணத்தை ரூ.75ல் இருந்து ரூ.50 ஆக குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கோடை விழாவின் முக்கிய நிகழ்வான படகு போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், தொடர்மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு போட்டி வரும் 25ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதேநேரம் மற்ற கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல பிரையண்ட் பூங்காவில் நடைபெறும்’’ என்றனர்.

The post மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Flower Show ,Kodaikanal ,61st Flower Show ,Summer ,Bryant Park ,Dindigul district, ,Godaikanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மலர் கண்காட்சி : கண்கவர் படங்கள்!!