×

விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது

நெய்வேலி: விழுப்புரம் திரு.வி.க சாலையில் இணை சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், நகரப் பகுதியில் உள்ள பத்திர பதிவுகள் இங்கு நடைபெறும். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 50 பத்திரப்பதிவுகள் நடைபெறும். இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.10 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் திடீரென்று அலுவலகத்தின் முன்பக்க கதவுகளை மூடி சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 2 மணி நேர சோதனைக்கு பிறகு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி அசோக் நகரில் உள்ள இணை சார் பதிவாளர் தையல் நாயகியின் வீட்டில் நேற்று காலை 7 மணி அளவில் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையில் சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

* 8 பேர் மீது வழக்குப்பதிவு
இணை சார்பதிவாளர் தையல்நாயகி, பதிவுரு எழுத்தர், இடைத்தரகர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் நள்ளிரவு வரை விசாரணை நடந்தது. இதில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இணை சார்பதிவாளர் தையல்நாயகி உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

The post விழுப்புரம், நெய்வேலியில் விஜிலென்ஸ் அதிரடி இணை சார்பதிவாளர் ஆபீஸ், வீட்டில் ரெய்டு: ரொக்க பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Neyveli ,Vigilance Action Co-Registrar Office ,Villupuram Thiru.V.K Road ,Neyveli, Villupuram ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.....