×

பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில் கோரிக்கை வீடியோவை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

சென்னை: பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த நபரின் வீடியோவை பார்த்து முதல்வர் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்வராஜ், பட்டா மாறுதலுக்காக வருவாய் துறை அலுவலகத்தை நாடியபோது அங்கிருந்த அதிகாரி லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து தனது ஆதங்கத்தை வீடியோவில் பதிவு செய்த அவர், அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். “சாதி சான்றிதழ், வருமான சான்றிதழை கூட ரூ.500, 1000 கொடுக்காமல் வாங்க முடியாது. வருவாய் துறையை நம்பித்தான் எங்கள் வாழ்க்கை இருக்கிறது. சாதாரணமானவர்களின் வாழ்க்கை வருவாய் துறையோடு முடிந்து விடும் போல இருக்கிறது. 2021ல் இருந்து தானாக பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என விதிமுறை இருந்தாலும் அது இன்னும் அமலுக்கு வரவில்லை. 2022ல் ஒரு நிலம் பதிவு செய்யப்பட்டது.

அதற்கு பட்டா மாற்றம் செய்யப்படவில்லை. அதிகாரிகளை நேரடியாக பார்க்க வேண்டாம் என்றுதான் டிஜிட்டல் சேவை என்று ஒன்று வைத்துள்ளீர்கள். எல்லாவற்றிலும் டாக்குமெண்ட் நம்பர் இருக்கிறது. யார் மீதும் குற்றச்சாட்டு வைக்கவில்லை. பொதுமக்களுடைய வலி, வேதனை… ஒவ்வொருவரும் தாசில்தார், விஏஓ, ஆர்ஐ ஆபீசில் இருந்தபடி, புலம்பிகிட்டும், தலையில் அடித்துக் கொண்டும் வெளியில் வருவதைப் பார்க்க முடிகிறது” என்று அதில் அவர் வேதனையாக பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்ததும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து அந்த நபருக்கு பட்டா வழங்க அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர். இந்த செயலை பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மீண்டும் செல்வராஜ் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் நான் பேசிய வீடியோவை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அந்த அடிப்படையில், உடனடியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரடியாக என்னிடம் விசாரணை செய்தார். எனது கோரிக்கையை சம்பந்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிகாரிக்கு அனுப்பி வைத்தார். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குள் எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் துணை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு பட்டா மாறுதல் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இதெல்லாம் உண்மையா என நினைத்தால் மிகப் பூரிப்பாக இருக்கிறது. இவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதும், லஞ்சம் வாங்கிய அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதற்காகவும் முதல்வருக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தனது வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

* கிராம நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட்
போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், பட்டா பெயர் மாற்ற கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் கேட்பதாக புகார் கூறியிருந்தார். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கிரண்ராஜ், லஞ்சம் கேட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், உரிய விசாரணை செய்யப்பட்டு லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி லஞ்சம் கேட்டது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து, பரணிபுத்தூர் கிராம நிர்வாக அதிகாரி கிரண்ராஜை சஸ்பெண்ட் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில் கோரிக்கை வீடியோவை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,Kanchipuram district ,Selvaraj ,
× RELATED படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி...