×

10 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கியது: கட்டி முடிக்க இன்னும் 3 வருஷம் ஆகுமாம்…

திருப்பரங்குன்றம்: அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பின் மதுரையில் எய்ம்ஸ் முதற்கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டி முடிக்க மேலும் கிட்டதிட்ட 3 ஆண்டுகள் ஆகும் என்று எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் தெரிவித்து உள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் அனுமந்தராவ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் நிறுவனம் மதுரை தோப்பூரில் அதிகாரப்பூர்வமாக கட்டுமானத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த மருத்துவமனை கட்டிடத்தை கட்டுவதற்கான அனுமதியை ஒன்றிய அரசின் சுகாதார துறை கடந்த மார்ச் 4ம் தேதி தனியார் நிறுவனத்திடம் வழங்கியது. இங்கு அமையவுள்ள மருத்துவமனை 150 தொற்றுநோய் சிகிச்சை வசதிகளுடன் கூடியது. அதில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் தொகுதியுடன் அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்தா, யோகா உள்ளிட்ட வசதிகளை கொண்ட மொத்தம் 900 படுக்கை வசதிகளுடன் உள்நோயாளிகள் பிரிவு, மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி, விடுதிகள், 5 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையிலான வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் தீவிர விபத்து முதலுதவி சிகிச்சை பிரிவு உட்பட அத்யாவசிய தேவைகள் கொண்ட முதல் கட்ட பணிகள் 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அலுவலக குடியிருப்புகள், ஆடிட்டோரியம் உள்ளிட்ட 42 பிளாக்குகளுடன் கூடிய முழு திட்ட பணிகளும் 2,31,782 சதுர மீட்டர் பரப்பளவில் 33 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடியிலிருந்து ரூ.2,021.51 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் முதற்கட்ட பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post 10 ஆண்டுகளுக்கு பின் எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கியது: கட்டி முடிக்க இன்னும் 3 வருஷம் ஆகுமாம்… appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Tiruparangunram ,Madurai ,
× RELATED எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி: நிபுணர் குழு பரிந்துரை