×

போலீஸ் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி எஸ்.ஐ அதிரடி கைது

திருப்பூர்: திருப்பூரில் எஸ்ஐ வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திம்மன்குத்து, தப்பட்டைகிழவன் புதூர் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவரது மகன் பிரசாந்த் (22). இவர், காவல்துறையில் பணிக்கு சேர முயற்சித்து வந்துள்ளார். இந்த சூழலில், இவரது உறவினர் ரமேஷ் என்பவர் மூலம் குட்டி (எ) ஜெயராஜ் (42) பிரசாந்துக்கு அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், எஸ்.ஐ தேர்வு எழுதாமலேயே பணி வாங்கி தருவதாக பிரசாந்திடம் ஜெயராஜ் கூறியுள்ளார். இதற்காக ரூ.25 லட்சம் பேரம் பேசியுள்ளனர். முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாயும், 2ம் தவணையாக 5 லட்சம் ரூபாயும் பிரசாந்த், ஜெயராஜிடம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட ஜெயராஜ், திருப்பூர் மாநகரில் நல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக உள்ள முரளிதரன் (52) மூலம் வேலை பெற்று தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து பிரசாந்திடம் பெற்ற பணத்தை ஜெயராஜ், அவருடைய நண்பர் கிருஷ்ணராஜ் மற்றும் நல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோருடன் பங்கிட்டுள்ளனர்.

இந்நிலையில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் பிரசாந்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரசாந்த் இதுகுறித்து கடந்த 7ம் தேதி கோவை மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, பணம் பெற்று மோசடி செய்த ஜெயராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான கிருஷ்ணராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

The post போலீஸ் வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி எஸ்.ஐ அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : SI ,Tirupur ,Satish ,Prashant ,Thimmankuttu, ,Thimmankuttu, Pollachi district ,Coimbatore ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...