×

ஆர்.பி.உதயக்குமாருக்கு ஓபிஎஸ் அணி எச்சரிக்கை: அஞ்ச மாட்டேன் என பதிலடி

போடி: ஓபிஎஸ் அணி தேனி மாவட்டச் செயலாளரும், பெரியகுளம் முன்னாள் எம்பியுமானவர் சையதுகான். இவர் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளராக செயல்பட்டவர். இவர் நேற்று போடியில் உள்ள ஓபிஎஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் பற்றி உதயக்குமார் தினந்தோறும் பழித்து விமர்சித்து வருவதை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். எடப்பாடியின் அடியாள் தான் இந்த உதயக்குமார். உதயக்குமார் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் உரிமையும் கிடையாது.

விரைவில் கொடநாடு வழக்கில் சிறைக்கு செல்வார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியால் தான் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிமுக கட்சியையும் பிளவுபடுத்தியுள்ளார். ஓபிஎஸ் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தான் தற்போது வரை கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அனைவரையும் வெளியேற்றி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, உதயக்குமார் கூறி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லை என்றால் விளைவுகள் வேறாக இருக்கும். இவ்வாறு கூறினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் முன்னாள் அமைச்சர் உதயக்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தேனி சையதுகான் நான் அடியாளாக இருந்தேன் என வாய் கூசாமல் ஒரு பொய் சொல்லி இருக்கிறார்.

எதற்காக இப்படி சொன்னார் என தெரியவில்லை அல்லது யார் எழுதி கொடுத்ததையும் வாசித்தாரா என தெரியவில்லை. நான் யாருக்கும் அடியாள் இல்லை. அது மட்டுமின்றி மிரட்டும் தொனியில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சொல்லியிருக்கிறார். எந்த விளைவையும் சந்திப்பதற்கு இந்த உதயக்குமார் தயங்குவதும் இல்லை, பின் வாங்குவதும் இல்லை. அவரது இந்த உருட்டல் மிரட்டலுக்கு நான் அஞ்ச மாட்டேன்’’ என்றார்.

The post ஆர்.பி.உதயக்குமாருக்கு ஓபிஎஸ் அணி எச்சரிக்கை: அஞ்ச மாட்டேன் என பதிலடி appeared first on Dinakaran.

Tags : OPS ,RB ,Udayakumar ,Bodi ,Theni ,Periyakulam ,Syedu Khan ,district secretary ,AIADMK ,
× RELATED எடப்பாடியை துரோகி என பேசியதை வாபஸ்...