×

முஸ்லிம்கள் பற்றி பேச வில்லையா? நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார் மோடி: காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: ‘முஸ்லிம்கள் குறித்து ஒருவார்த்தை கூட பிரசாரத்தில் பேசவில்லை என முழு பொய் சொல்லும் பிரதமர் மோடி வேகமாக தனது நினைவாற்றலை இழந்து வருகிறார்’ என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரதமர் மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘‘சிறுபான்மையினருக்கு எதிரான ஒருவார்த்தை கூட நான் பேசவில்லை. அவர்களுக்கு எதிராக பாஜ இன்று மட்டுமல்ல, எப்போதும் செயல்பட்டதில்லை’’ என்றார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரதமர் தனது நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார். அவர் உண்மையை பேசுவதில்லை. நேற்று பேசினதை இன்று மறந்து விடும் அவர், நாளை அப்படி ஒருபோதும் பேசியதில்லை என அடித்துக் கூறுவார்.மக்களவை முதல்கட்ட தேர்தல் முடிந்த ஏப்ரல் 19க்குப் பிறகிலிருந்து பிரதமர் மோடியின் பிரசாரம் முழுவதும் இந்து முஸ்லிம் வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக மாறி விட்டது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் அமைப்புடன் ஒப்பிட்டு பேசிய அவர் பல விஷயங்களில் மவுனம் காக்கிறார்.

ஆனால் முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டமிடுவதாக பொய்யை பரப்புகிறார். சில ஆண்டுக்கு முன், குஜராத் கலவரத்தின் போது நடந்த கொலைகளில் வருத்தம் உண்டா என்று கேட்டதற்கு, ‘காரின் அடியில் நாய்க்குட்டி வரும்போது கூட என் மனம் புண்படும்’ என்று கூறிய மோடி, இப்போதும் அதே மொழியைத்தான் பயன்படுத்துகிறார். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.

The post முஸ்லிம்கள் பற்றி பேச வில்லையா? நினைவாற்றலை வேகமாக இழந்து வருகிறார் மோடி: காங்கிரஸ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Congress ,New Delhi ,PTI ,
× RELATED 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை...