×

1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை: பிரதமர் மோடி சர்ச்சை பேட்டி; காங்கிரஸ் கடும் கண்டனம்

 

புதுடெல்லி: காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் மோடி அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாத்மா காந்தி குறித்து பிரதமர் மோடி ஏபிபி என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘உலகம் முழுவதிலும் மகாத்மா காந்தி ஒரு சிறந்த மனிதர். இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியை உலகம் முழுவதும் அறியும் பொறுப்பு நமக்கு இல்லையா?. அதை செய்யாததால் நான் வருந்துகிறேன். ‘காந்தி’ படம்(1982ல் வெளியானது) எடுக்கும் முன் வரை அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. அந்த படம் வெளியான பிறகுதான் இந்த நபர் யார் என்று அறியும் ஆவல் உலகம் முழுவதும் எழுந்தது.

அதற்கு முன்பு வரை காந்தியை பிரபலப்படுத்த நாம் எதையும் செய்யவில்லை. மார்ட்டின் லூதர் கிங், தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா பற்றி உலகம் அறிந்து இருந்தது. அவர்களுக்கு காந்தியும் குறைந்தவர் அல்ல என்பதை உறுதிப்படுத்துவது இந்த நாட்டின் பணியாகும். மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு அந்த முக்கியத்துவம் கிடைத்திருக்க வேண்டும் என்பதை உலகம் முழுவதும் பயணம் செய்த என்னைப்போன்ற ஒருவர் ஒப்புக் கொள்ள வேண்டும். உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காந்தியிடம் உள்ளது. நாம் நிறைய இழந்திருக்கிறோம்’ என்று தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த சர்ச்சைப்பேட்டிக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ‘மகாத்மா காந்தி கொலையில் நாதுராம் கோட்சேவுடன் சித்தாந்த முன்னோர்கள் ஈடுபட்டவர்கள், மகாத்மா வழங்கிய சத்தியத்தின் பாதையை ஒருபோதும் பின்பற்ற முடியாது. இப்போது பொய் மூட்டை கட்டிக்கொண்டு போகப் போகிறது’ என்று குறிப்பிட்டு உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,’ முழு அரசியல் அறிவியல் பாடம்(என்டயர் பொலிட்டிக்கல் சயின்ஸ்) படித்த மாணவர்கள் மட்டும் தான் மகாத்மா காந்தியைப் பற்றி தெரிந்துகொள்ளபடத்தைப் பார்க்க வேண்டும்’ என்று பிரதமர் மோடியைப்பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘மகாத்மா காந்தி உலகின் நவீன வரலாற்றின் மிகச்சிறந்த அடையாளம். சுதந்திரத்திற்கு முன்பே, ஒவ்வொரு காலனித்துவ நாடும் போற்றும் நபராக அவர் இருந்தார். மோடி தனது பேட்டியில் குறிப்பிட்ட நெல்சன் மண்டேலாவும், மார்ட்டின் லூதர் கிங்கும் காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. இந்தியாவின் தலைசிறந்த சிந்தனைத் தலைவரை பிரபலப்படுத்த ஒரு திரைப்படம் தேவை என்று நினைப்பது அறியாமை மட்டுமல்ல, காந்தியை அவமதிக்கும் செயலாகும். முழுஅரசியல் அறிவியல் பட்டதாரி பேச்சை ஏன் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதை அவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்’ என்று விமர்சனம் செய்துள்ளார்.

The post 1982ல் காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை: பிரதமர் மோடி சர்ச்சை பேட்டி; காங்கிரஸ் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,PM Modi ,Congress ,New Delhi ,Modi ,Mahatma Gandhi ,
× RELATED சொல்லிட்டாங்க…