×

15 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்: ரூ.4.40 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் தினமும் பக்தர்களின் வருகை அதிகளவு உள்ளது. ஒருசில வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. அதன்படி நேற்று கோயிலில் 85,825 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 36,146 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.40 கோடி காணிக்கை செலுத்தினர்.

இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆக்டோபஸ் கட்டிடம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 15 மணி நேரத்திற்கு பிறகே தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அதேபோல் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பால், மோர், அன்னபிரசாதம் போன்றவை வழங்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரமும் நேற்று 16 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post 15 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்: ரூ.4.40 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Eyumalaiyan ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை...