×

ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு; கலவரத்தை தடுப்பது எப்படி? தடியடி துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸ் ஒத்திகை

திருமலை: ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கையின்போது கலவரம் ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்து போலீசார் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர். ஆந்திராவில் கடந்த 13ம்தேதி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. ஆந்திர தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்திருந்தது. வாக்குப்பதிவு நாளில் மாநிலம் முழுவதும் 33 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக சிறப்பு புலனாய்வுக்குழு கண்டறிந்துள்ளது. இதுகுறித்து சிஐடி அதிகாரிகள் குழு ஆய்வு செய்து டிஜிபி ஹரீஷ்குமாரிடம் 150 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். வாக்குப்பதிவு நாளில் நடந்த சம்பவம் போன்று வாக்கு எண்ணிக்கை நாளிலும் (ஜூன் 4ம்) வன்முறைகள் நடக்குமோ? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நேற்று மாலை பிரகாசம் மாவட்டத்தில் ேபாலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர். அதாவது, பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று மாலை ஒரு கும்பல் கூடியது. அந்த கும்பல் ஆயுதங்களுடன் வாக்கு எண்ணும் மையம் நோக்கி சென்றது. அப்போது 10க்கும் ேமற்பட்ட போலீஸ் வாகனங்களில் போலீசார் அங்கு குவிந்தனர். கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் இயந்திரமும் கொண்டுவரப்பட்டது. அப்போது கலவரக்காரர்கள் போலீசாரை நோக்கி தாக்குவதற்காக சென்றனர். அவர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர். மேலும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

அப்போது கலவர கும்பல் திடீரென பஸ் நிலைய வளாகத்தில் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று வாகனங்களில் ஏற்றினர். இருப்பினும் கலவரக்காரர்கள் போலீசாரை மீறி வாக்கு எண்ணும் மையம் அருகே முன்னேறி சென்றனர். இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். அதன்பின்னர் மீண்டும் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த ஒத்திகை சுமார் 45 நிமிட நேரம் நடந்தது. இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த சம்பவம் நடந்து முடிந்தபிறகு இவை அனைத்தும் போலீசாரின் ஒத்திகை என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து பிரகாசம் எஸ்.பி. சுமித்சுனில் கூறுகையில், ‘‘வாக்கு எண்ணிக்கை நாளில் கலவரம் ஏதேனும் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது? என்பதற்கான ஒத்திகையை நடத்தினோம். இதற்காக போலீசார் கலவரக்காரர்கள் போன்று நடித்தனர். இதற்காக டம்மி குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. இதேபோன்று தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து விழுவது போன்று தத்ரூபமாக போலீசார் நடித்தனர். எனவே வாக்கு எண்ணிக்கை நாளில் சிறு பிரச்னை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க ஆந்திர போலீசார் தயார் நிலையில் உள்ளனர் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தவே இதுபோன்று முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது’’ என்றார்.

 

The post ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு; கலவரத்தை தடுப்பது எப்படி? தடியடி துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸ் ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Tirumala ,Andhra ,
× RELATED வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்...