×

குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை

சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

தனது மனைவி வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை துபாயில் மருத்துவ பரிசோதனை செய்து கண்டறிந்து, குழந்தையின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் இர்ஃபானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு நிகராக தற்போது யூடியூப்பர்களும் பிரபலமாகிவிட்டனர். தமிழ் நாட்டில் புகழ்பெற்ற யூடியூப்பர்களில் ஒருவராக இருப்பவர் இர்ஃபான். இவருக்கு யூடியூப்பில் கிட்டத்தட்ட 39 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். யூடியூப்பில் தினசரி வீடியோ பதிவிட்டு வரும் இர்பான் அதன் மூலம் பல லட்சம் சம்பாதித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.

ஆலியா என்பவரை திருமணம் செய்துகொண்ட இர்ஃபான், திருமணத்துக்கு பின்னர் தன் மனைவியுடன் சேர்ந்து பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று வெளியிட்டு யூடியூப் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.

ஏனெனில், அந்த வீடியோவில் தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்து இருக்கிறார். இர்ஃபானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர்களுக்கு என்ன குழந்தை உள்ளது என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார் இர்ஃபான். அவர் தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்று சொல்ல, அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று பதிலுக்கு சொல்ல, இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இர்பான் தான் வெற்றி பெற்றார்.

இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை அறிவித்தார் இர்ஃபான். இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அது என்ன குழந்தை என்பதை வெளியிடுவது சட்டப்படி குற்றமாக இருக்கும் நிலையில், இர்ஃபான் மட்டும் எப்படி வெளியிட்டார் என்பது பலரது கேள்வியாக இருந்தது. அவர் துபாய்க்கு குடும்பத்துடன் சென்று, அங்கு ஸ்கேன் செய்து தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அங்கு இதற்கு அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவால் இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழ்நாடு மருத்துவத்துறை முடிவு செய்துள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

The post குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளங்களில் அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Irfan ,Chennai ,Tamil Nadu Medical Department ,Dubai ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறை அரசு...