×

ரூ.18.50 லட்சம் மட்டுமே திருட்டு அம்பலம் ரூ.1.50 கோடி கொள்ளை என பொய் புகார் அளித்த பாஜ நிர்வாகி மீது வழக்கு: திருடன் பிடிபட்டதால் போலீசார் அதிரடி

அன்னூர்: திருடியவர் பிடிபட்டதையடுத்து, வெறும் 18.50 லட்சம் மட்டுமே திருட்டு போனதற்கு ரூ.1.50 கோடி கொள்ளை போனதாக பொய் புகார் அளித்த பாஜ நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(45). அன்னூர் ஒன்றிய பாஜ அமைப்பு சாரா அணி முன்னாள் தலைவர். இவர் தனது வீட்டு பீரோ லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 கோடி மற்றும் 9 பவுன் நகை திருட்டு போனதாக கடந்த 18ம் தேதி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. அத்தனையும் 500 ரூபாய் கட்டுகளாக லாக்கரில் வைத்திருந்ததாக போலீஸ் விசாரணையில் விஜயகுமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பணத்தை திருடியது திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அன்பரசன் (33) என்பது தெரியவந்தது.

அவர் சோமனூரில் தங்கி திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.18.50 லட்சம், 9 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் கூறுகையில்,“அன்னூர் சொக்கம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார் வீட்டில் ரூ.1.50 கோடி, 9 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக புகார் வந்தது. உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினோம்.

சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், குற்றவாளி அடையாளம் தெரிந்து அன்பரசன் என்பவரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.18.50 லட்சம் ரொக்கம், 9 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அன்பரசனிடம் மேற்கொண்ட விசாரணையில், வீட்டில் இருந்து ரூ.18.50 லட்சம் பணம் தான் திருடினேன் என கூறினார். இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது, அவர் வீட்டில் ரூ.1.50 கோடி இல்லை, ரூ.18.50 லட்சம் தான் இருந்ததது என ஒப்புக்கொண்டார்.

மேலும், போலீசாரிடம் பிரமாண்ட தொகை திருடு போனது என சொன்னால்தான் துரிதமாக வேலை செய்வார்கள் என சொன்னதாக கூறினார். பொய்யான புகார் கூறியதால் பாஜ பிரமுகர் விஜயகுமார் மீது ஐபிசி 182, 203 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்போம். கைதான அன்பரசன் மீது ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.18.50 லட்சம் மட்டுமே திருட்டு அம்பலம் ரூ.1.50 கோடி கொள்ளை என பொய் புகார் அளித்த பாஜ நிர்வாகி மீது வழக்கு: திருடன் பிடிபட்டதால் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Vijayakumar ,Annur Chokampalayam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பாஜ நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளை: கோவையில் பரபரப்பு