×

பாஜ நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளை: கோவையில் பரபரப்பு

அன்னூர்: கோவை பாஜ நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி ரொக்கம், 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், அன்னூர் சொக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். அன்னூர் ஒன்றிய பாஜ அமைப்பு சாரா அணி முன்னாள் தலைவர். இவர் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு வாட்டர் வாஷ் செய்யும் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று விஜயகுமார் வெளியே சென்றுவிட்டு திரும்பியபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோவில் இருந்த பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விஜயகுமார் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தான் புதிதாக இடம் வாங்குவதற்காக ரூ.1.50 கோடியை தனது வீட்டில் 2 நாட்களுக்கு முன்பு வைத்திருந்தேன். நேற்று அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று இடம் வாங்குவதற்கான நடைமுறைகளை செய்துவிட்டு பணத்தை எடுப்பதற்காக வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

வீட்டின் முதல் தளத்திற்கு சென்று பணம் வைத்திருந்த அறையை பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.50 கோடி மற்றும் 9 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்’ என்று கூறி உள்ளார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜயகுமார் புகார் மீது பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் தனிப்படைகள் அமைக்கப்பட்டும் விசாரணை நடந்து வருகிறது.

The post பாஜ நிர்வாகி வீட்டில் ரூ.1.50 கோடி கொள்ளை: கோவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,Vijayakumar ,Annur Chokampalayam ,Coimbatore district ,Annoor Union ,Dinakaran ,
× RELATED இனிமேல் வாழ்க்கையில் விமான...